திருவள்ளூர் மாவட்டத்தில் சீரான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை கலெக்டர் தகவல்


திருவள்ளூர் மாவட்டத்தில் சீரான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 21 Jun 2019 3:45 AM IST (Updated: 21 Jun 2019 1:02 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் சீரான குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக மாற்றி அறிவித்தமைக்கு திருவள்ளூர் மாவட்ட மக்கள் சார்பில் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழை 42.70 சதவீதம் குறைவாக பெய்தது. இதனால் கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க முன்கூட்டியே செயல்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு பெரிதும் பாதிக்கப்படும் பகுதிகள் கண்டறியப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை காலத்தில் எந்த வித பாதிப்பும் இன்றி அனைத்து பகுதிகளிலும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து களஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஏதுவாக ஊரக பகுதிகளில் முன்கூட்டியே 172 புதிய ஆழ்துளை கிணறுகள், ஏற்கனவே இருக்கும் 79 ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்துதல், 143 மின்மோட்டார் திறன் மேம்படுத்துதல், 128 ஆழ்துளை கிணறுகள் சுத்தம் செய்தல் போன்ற பணிகள் முழுவீச்சில் செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இவை மட்டும் இல்லாமல் நிலத்தடி நீர்மட்டம் முழுவதுமாக குறைந்துவிட்ட 4 ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 14 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 52 குக்கிராமங்களில் டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் 3 லட்சத்து 41 ஆயிரத்து 551 மக்கள் பயன்பெற்றுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் 5 புதிய ஆழ்துளை கிணறுகள், ஒரு புதிய மின்மோட்டார், ஒரு புதிய தண்ணீர் குழாய்கள் அமைத்தல் மற்றும் ஏற்கனவே இருக்கும் 9 ஆழ்துளை கிணற்றை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகள் மட்டுமல்லாது 4 டேங்கர் லாரிகள் மூலம் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் 10 பேரூராட்சிகளில் ஏற்கனவே இருந்த 24 ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோடையில் நிலத்தடி நீர்மட்டம் குறையும் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு அங்கு தங்குதடையுமின்றி குடிநீர் வினியோகம் செய்ய ஏதுவாக நீர்ஆதாரம் இருக்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது. மின்மோட்டார் பழுது ஏற்படுதல் மற்றும் மின்அழுத்தம் குறைவு காரணமாக குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் பகுதிகளில் டேங்கர் லாரிகள் மற்றும் டிராக்டர்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

மேலும் விவசாய கிணறுகளில் இருந்தும் குடிநீர் வினியோகம் செய்ய 159 விவசாய கிணறுகள் கண்டறியப்பட்டு தற்போது 47 விவசாய கிணறுகளில் இருந்து டிராக்டர் மூலம் குடிநீர் எடுத்துவரப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் 2018-19-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 370 தடுப்பணைகள், 338 கற்பாறைகளை கொண்ட தடுப்பணைகள், பயன்பாட்டில் இல்லாத 355 ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மறுசீரமைத்தல், 410 பண்ணைக்குட்டைகள் அமைத்தல், 85 ஆயிரத்து 668 வரத்து கால்வாய் மற்றும் பாசன கால்வாய்களின் நீர்த்தேக்க குட்டைகள் அமைத்தல், மரக்கன்றுகள் மற்றும் மரங்களுக்கு இடையில் மழைக்காலங்களில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 448 நீர்தேங்கும் சிறுஅகழிகள் அமைத்தல், அரசு புறம்போக்கு நிலங்களில் 75 ஆயிரத்து 505 எதிரெதிர் நீர்தேங்கும் அகழிகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஏரி, குளம் மற்றும் குட்டை ஆகிய நீர்நிலைகளின் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இந்த பணி முடிவுற்றதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். வரத்து கால்வாய்கள் தூர்வாரி சுத்தம் செய்யப்படுவதால் மழைநீர் தடையின்றி நீர்நிலைகளில் சேகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story