திருப்பத்தூர் அருகே, ஊருணியை சீரமைக்கும் கிராம மக்கள்


திருப்பத்தூர் அருகே, ஊருணியை சீரமைக்கும் கிராம மக்கள்
x
தினத்தந்தி 21 Jun 2019 4:15 AM IST (Updated: 21 Jun 2019 5:44 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே வறண்டு போன ஊருணியை தூர்வாரும் பணியை கிராம மக்கள் தங்கள் சொந்த செலவில் செய்தனர். மேலும் அரசை எதிர்பார்க்காமல் தங்களது பணியை தாங்களே செய்ய வேண்டும் என்றும் கூறினர்.

திருப்பத்தூர், 

திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அம்மாபட்டி ஊராட்சியைச் சேர்ந்தது இரணியூர் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் எதிரே வரலாற்று சிறப்பு மிக்க அம்மன் சேங்கை ஊருணி உள்ளது. இந்த ஊருணியில் குடிப்பதற்காக தண்ணீர் எடுக்கச் செல்லும் கிராம மக்கள் காலணிகள் அணியாமல் நடந்து சென்று தண்ணீரை எடுத்துச் செல்வார்கள். மேலும் இந்த ஊருணியில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, மீன் பிடிக்கவோ கூடாது என்று கட்டுப்பாடு இருந்து வருகிறது.

இந்தநிலையில் மாவட்டம் முழுவதும் தற்போது கடும் வறட்சி காரணமாக பல்வேறு நீர் நிலைகளான ஊருணிகள், கண்மாய்கள், ஆறுகள் வறண்டு காணப்படுகிறது. அவ்வாறு இந்த ஊருணியும் தற்போது வறண்டு காணப்படுகிறது. இதை தூர் வார கிராம மக்கள் முடிவு செய்து அரசை எதிர்பார்க்காமல் அவர்களே களத்தில் இறங்கினர்.

இதையடுத்து இந்த கிராம மக்களோடு அருகில் உள்ள செண்பகம்பேட்டை, முத்துவடுகநாதபுரம், நாகலிங்கபட்டி, மார்க்கண்டேயன்பட்டி, காந்திநகர், அயினிப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் ஆதரவு கொடுத்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். மேலும் ஊருணியை தூர்வாருவதற்காக ஜே.சி.பி. மற்றும் தளவாட எந்திரங்களை கிராம மக்கள் தங்கள் செலவில் கொண்டு வந்து பணியை மேற்கொண்டனர். இது தவிர பயன்பாடு இல்லாமல் இருந்த நீர் வரும் வரத்துக்கால்வாய்களையும் கிராம மக்கள் சுத்தம் செய்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், மாவட்ட நிர்வாகம் பல்வேறு இடங்களில் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வடிகால், வாய்க்கால்களை சரிசெய்து வரும் நிலையில் இதுபோன்ற தன்னார்வம் மிக்க கிராமப்புறங்களில் ஊராக வளர்ச்சித் துறையின் சார்பில் கவனம் செலுத்தினால் மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும். மேலும் இதுபோன்ற வரலாற்று சிறப்பு மிக்க ஊருணிகள் பாதுகாக்கப்பட்டு அதன் மூலம் நிலத்தடி நீர் சேமிக்கப்படும்.

மேலும் அரசு, வரும் மழை காலங்களில் மழை நீர் சேமிப்பு போன்ற திட்டங்களிலிருந்து நீர் சேமிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். எங்கள் கிராமத்தில் உள்ள இந்த அம்மன் சேங்கை ஊருணி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் சார்பில் ரூ.1.60 லட்சம் மதிப்பில் கம்பி வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த ஊருணியை தூர் வார முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம். இதனால் மழைக்காலங்களில் இந்த ஊருணியில் தண்ணீரை சேமித்து வைத்து குடிநீர் பற்றாக்குறையை போக்க முடியும். இதேபோல் மாவட்டத்தில் உள்ள குடிநீர் ஊருணிகளை அந்தந்த கிராம மக்கள் அரசை எதிர்பார்க்காமல் தூர் வாரி தயாராக வைக்க முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கள் கூறினர். 

Next Story