பிரதம மந்திரி விவசாய நீர் பாசன திட்டத்தின் துணை நிலை நீர் மேலாண்மை பணிகள் செயல் இயக்குனர் ஆய்வு
பிரதம மந்திரி விவசாய நீர் பாசன திட்டத்தின் துணை நிலை நீர் மேலாண்மை பணிகளை செயல் இயக்குனர் சந்திரசேகரன் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி விவசாய நீர் பாசனத்திட்டத்தின் துணை நிலை நீர் மேலாண்மை பணிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் துரிஞ்சாபுரம் வட்டாரத்தில் கார்கோணம் மற்றும் ஊசாம்பாடி ஆகிய கிராமங்களில் நடைபெற்று வருகிறது.
இதில் மின் மோட்டார் பம்புசெட், வயலுக்கு அருகில் பாசன நீரினை கொண்டு செல்லும் வகையில் நீர்பாசன குழாய் அமைத்தல் மற்றும் தரைநிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைத்து பாசனம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறுகிறது.
இந்த பணிகளை தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குனர் சந்திரசேகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் உதவி செயற் பொறியாளர் ரகுநாதன், வேளாண்மை துணை இயக்குனர் (மாநில அரசு திட்டம்) வேலாயுதம், வேளாண்மை துணை இயக்குனர் வடமலை, மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை வேளாண்மை உதவி இயக்குனர் தாமோதரன், துரிஞ்சாபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராஜி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் செயல் இயக்குனர் சந்திரசேகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மூலம் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி விவசாய நீர் பாசனத்திட்டத்தின் துணை நிலை நீர் மேலாண்மை திட்டத்தில் 335 விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு, மின்மோட்டார், பாசனகுழாய் மற்றும் தரைநிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றுக்கு ரூ.60 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ரூ.4 கோடி பின்னேற்பு மானியம் இத்திட்டத்தில் பங்கேற்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் சிறு, குறு மற்றும் இதர விவசாயிகள் அனைவருக்கும் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இந்த நான்கு பணிகளில் குழாய் கிணறு, ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர் பாதுகாப்பான ஆழத்தில் உள்ள 12 பாதுகாப்பான குறு வட்டங்களான அக்கராபாளையம், ஆரணி, கண்ணமங்கலம், முள்ளிப்பட்டு, சத்தியவிஜயநகரம், விண்ணமங்கலம், நாட்டேரி, பெருங்கட்டூர், தேத்துறை, வெம்பாக்கம், மங்களம், தெள்ளார் ஆகிய குறு வட்டங்களில் உள்ள விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.
இதர மூன்று பணிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களில் உள்ள விவசாயிகளும் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இந்த மானிய உதவித்திட்டம், நுண்ணீர் பாசனம் அமைக்கும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். நுண்ணீர் பாசன அமைப்பு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கப்படுகிறது. எனவே பாசன வசதி உள்ள அனைத்து விவசாயிகளும் நுண்ணீர் பாசனம் அமைத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story