நீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு குறுந்தகடு அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்டார்
தூத்துக்குடியில் நீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு குறுந்தகட்டை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று வெளியிட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் நீர் சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு குறுந்தகட்டை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று வெளியிட்டார்.
குறுந்தகடு வெளியீட்டு விழா
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நீர் சேமிப்பு விழிப்புணர்வு குறுந்தகடு வெளியீட்டு விழா நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., சின்னப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு விழிப்புணர்வு குறுந்தகட்டை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குடிநீர் பிரச்சினை
குடிநீர் பிரச்சினை தற்போது விவாதப்பொருளாக மாற்றப்பட்டு விட்டது. தமிழக அரசு இந்த பிரச்சினையை எப்படி சமாளித்து வருகிறோம் என்பதை மக்கள் அறிவார்கள். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல திட்டங்கள் தீட்டப்பட்டன. அந்த வழியில் தமிழக அரசு குடிநீர் தட்டுப்பாடு வந்தாலும் அதனை சமாளிக்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
முதல்-அமைச்சர் குடிநீர் பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். அரசியல் காரணத்துக்காக உண்மையை திரித்துக் கூறினாலும், உண்மையை மாற்ற இயலாது.
ரூ.106 கோடி
ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், கோவில்பட்டி, புதூர், கயத்தாறு ஆகிய 5 யூனியன்கள் பயன்பெறும் வகையில் ரூ.106 கோடி செலவில் 248 குடியிருப்பு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டப்பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார்.
தூத்துக்குடியில் ரூ.8 கோடி செலவில் கோரம்பள்ளம் குளத்தில் உறைகிணறு அமைத்து 8 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டப்பணிகள் நடந்து வருகிறது. நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டாலும், தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தந்த திட்டங்களால் குடிநீர் பற்றாக்குறை இல்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீதம் குடிநீர் தட்டுப்பாடு இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு யாகம்
வைப்பாறு, ஆலந்தலை ஆகிய பகுதிகளில் கடல்நீரை சுத்திகரித்து குடிநீராக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தொழில்நுட்ப ரீதியாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இறைவன் அருளும் தேவை என்ற அடிப்படையில் அ.தி.மு.க. சார்பில் நாளை (அதாவது இன்று) அனைத்து சிவன் கோவில்களிலும் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
விழாவில், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாநகர நல அலுவலர் வினோத்ராஜா, உதவி ஆணையர் பிரின்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆணையர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story