சிவகங்கை அரசு இசைப்பள்ளிக்கு புதிய கட்டிடம்; மாவட்ட நிர்வாகம் தகவல்


சிவகங்கை அரசு இசைப்பள்ளிக்கு புதிய கட்டிடம்; மாவட்ட நிர்வாகம் தகவல்
x
தினத்தந்தி 21 Jun 2019 10:25 PM GMT (Updated: 21 Jun 2019 10:25 PM GMT)

சிவகங்கையில் உள்ள அரசு இசைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிவகங்கை,

கலை பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற உலக இசை விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் நடைபெற்றது. அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ்சிவன் வரவேற்று பேசினார்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு காசோலை மற்றும் சான்றிதழ்களை வழங்கி கலெக்டர் பேசியதாவது:-

இசை என்பது இறைவனை ஒப்பிடும் அளவிற்கு உள்ள பொருளாகும். அதிலும் நமது மாவட்டம் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் இறைவன் பெயர் மற்றும் நதியின் பெயரை இணைத்து சிவகங்கை என பெயர் பெற்ற புண்ணிய பூமியாகும். இங்கு இசையில் சாதனை படைக்கும் ஒவ்வொருவருக்கும் மிகுந்த பெருமை உண்டாகும். குறிப்பாக, இசைக்கும், சிவனுக்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு.

சிவன் எப்போதும் இசையில் நாட்டம் கொண்டவர். அத்தகைய பெருமைமிக்க இசையை கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு மாணவ-மாணவியும் அதிர்ஷ்டசாலிகள் தான். அத்தகைய இசையை அதிக அளவில் மாணவ-மாணவிகள் கற்றுக் கொண்டு சாதனை படைக்க வேண்டும்.

இசைத்துறைக்காக கலைப் பண்பாட்டுத்துறையின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தைப் பொறுத்தவரை இசைப் பள்ளிக்கு தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்குள்ள இசைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியளித்து பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. இதுபோல் பாரம்பரிய மிக்க இசையை பாதுகாக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பூர்ணபுஷ்பகலா, நல்லாசிரியர் கண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குரலிசை ஆசிரியர் அய்யனார் நன்றி கூறினார்.

Next Story