கடற்கரை சாலையில் 4 ஆயிரம் பேர் பங்கேற்ற யோகாசன நிகழ்ச்சி


கடற்கரை சாலையில் 4 ஆயிரம் பேர் பங்கேற்ற யோகாசன நிகழ்ச்சி
x
தினத்தந்தி 21 Jun 2019 11:00 PM GMT (Updated: 21 Jun 2019 10:57 PM GMT)

புதுவை கடற்கரையில் 4 ஆயிரம் பேர் பங்குகொண்ட பிரம்மாண்ட யோகாசன நிகழ்ச்சி நேற்று நடந்தது.

புதுச்சேரி,

புதுவை அரசு சார்பில் கடற்கரை சாலையில் 5-வது சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கடற் கரையில் கடந்த 2 நாட்களாக மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பிரம்மாண்ட யோகாசன ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

நேற்று காலை யோகாசன நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், சுகாதாரத்துறை செயலாளர் விவேக் பாண்டா, கல்வி துறை செயலர் அன்பரசு, கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் உள்பட அரசு அதிகாரிகள், யோகா வல்லுனர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியையொட்டி தலைமை செயலகம் முதல் பழைய கோர்ட்டு வளாகம் வரை சுமார் 2 கி.மீ தூரத்துக்கு தரைவிரிப்புகள் விரிக்கப்பட்டு இருந்தன. இதில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 3,500 மாணவ, மாணவிகள், யோகா மையங்களின் தன்னார்வலர்கள் 500 பேர் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியை முதல்- அமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைப்பதாக இருந்தது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பார்கள் என சுற்றுலா துறை சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவர்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை.

புதுச்சேரியில் அதிகாரம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டதையொட்டி அது தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்று விட்டார். இதனால் அவர் யோகாசன நிகழ்ச்சியை தொடங்கி வைக்க வரவில்லை. அவர் வராததால் அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் இதில் பங்கேற்கவில்லை.

கவர்னர் கிரண்பெடியும் புதுச்சேரியில் இல்லை. அரசு சார்பில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார் தலைமையில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. லாஸ்பேட்டை என்.சி.சி. அலுவலகத்தில் குரூப் கமாண்டர் கர்னல் ஜெயச்சந்திரன் தலைமையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் என்.சி.சி. முப்படை பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதுதவிர ஜிப்மர் மருத்துவமனை, காவல் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள், கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளி, சிறைச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

Next Story