மத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; பெண்கள் உள்பட 3 பேர் பலி - 2 பேர் படுகாயம்


மத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; பெண்கள் உள்பட 3 பேர் பலி - 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 23 Jun 2019 5:02 AM IST (Updated: 23 Jun 2019 5:02 AM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மத்தூர்,

மத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியான இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா மத்தூர் அருகே உள்ளது பெரிய ஜோகிப்பட்டி. இங்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட உயர்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள இடத்தின் அருகில் மாந்தோப்பு ஒன்று உள்ளது. இந்த தோப்பில் சாமல்பட்டியைச் சேர்ந்த ரிஸ்வான் (வயது 42) என்பவர், சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பட்டாசுகள் தயாரிக்கும் ஆலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் மொத்தம் 4 குடோன்கள் உள்ளன.

இதில் சாமல்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் 7 பேர் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தனர். இதனிடையே நேற்று 5 தொழிலாளர்கள் அங்கு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிலையில் மாலை 4.30 மணி அளவில் திடீரென்று கடைசியாக உள்ள ஒரு குடோனில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது. அப்போது அங்கு 5 தொழிலாளர்களும் பணியில் இருந்தனர்.

இந்த நிலையில் பட்டாசுகள் தொடர்ச்சியாக வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் அங்கு வந்தனர். அவர்கள் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அவர்கள் ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதேபோல மத்தூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டி, மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதேபோல ஊத்தங்கரை, போச்சம்பள்ளியில் இருந்து தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் அங்கு விரைந்து வந்தன. தீயணைப்பு படை வீரர்கள் பட்டாசு ஆலையில் பிடித்திருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மாலை 4.30 மணி முதல் 5.15 மணி வரையில் தொடர்ச்சியாக பட்டாசுகள் ஒரு குடோனில் வெடித்து சிதறியது. இதில் ஆலையின் கடைசி அறை முழுமையாக இடிந்து தரை மட்டமானது. மேலும் அதில் இருந்த ஹோலோபிரிக்ஸ் கற்கள், மேற்கூரைகள் சுமார் 100 அடி தூரம் வரையில் தூக்கி வீசப்பட்டு கிடந்தது. இந்த கோர விபத்தில் சாமல்பட்டியைச் சேர்ந்த அமீது (35) என்பவர் தலை சிதறி பலியானார்.

அதேபோல சாமல்பட்டியைச் சேர்ந்த அங்கையர்கண்ணி (45), ஆசியா (40) ஆகிய 2 பெண்களும் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த இம்ரான் (35), சாமல்பட்டியை சேர்ந்த அன்வர் (45) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக அவர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்த கோர விபத்தில் பட்டாசு ஆலையில் இருந்த ஒரு குடோன் முழுமையாக சேதம் அடைந்தது. மேலும் 2 குடோன்களும் சேதம் அடைந்தன. நல்ல வேளையாக தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து மத்தூர் போலீசார் பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலையின் உரிமையாளர் ரிஸ்வானை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த பட்டாசு ஆலை முறையாக அனுமதி பெற்று இயங்கியதா? அங்கு தீ தடுப்புக்கு தேவையான பாதுகாப்பு சாதனங்கள் இருந்ததா? தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story