நாகை, திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம்


நாகை, திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2019 4:30 AM IST (Updated: 24 Jun 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

நாகை, திருவாரூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

திருத்துறைப்பூண்டி,

திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இத்திட்டத்தை கைவிடக்கோரியும் விவசாயிகள், பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திருத்துறைப்பூண்டி-நாகை கிழக்கு கடற்கரை சாலையில் அனைத்து கட்சியினர், பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய கம்னியூஸ்டு கட்சியின் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பழனிசாமி, ஒன்றிய செயலாளர் பாஸ்கர், திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ., தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரகாஷ், நகர செயலாளர் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜ், ம.தி.மு.க. நகர செயலாளர் சேகர், அண்ணா திராவிடர் கழக தலைவர் திவாகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் செல்வன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சுப்பையன் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராகவும், டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர். இதேபோல பாமணி, அத்திமடை ஆகிய பகுதிகளிலும் மனித சங்கிலி போராட்டம் நடந்தது.

முத்துப்பேட்டையில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கினார். மீத்தேன் எதிர்ப்பு திட்ட போராட்டக்குழு டாக்டர் பாரதிசெல்வம், எம்.எல்.ஏ.க்கள் பூண்டி.கலைவாணன் (திருவாரூர்), டி.ஆர்.பி.ராஜா (மன்னார்குடி), முன்னாள் எம்.பி. விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மனித சங்கிலி போராட்டம் முத்துப்பேட்டையில் தொடங்கி ஆலங்காடு, உதயமார்த்தாண்டபுரம், எடையூர் சங்கேந்தி, பாண்டி, கள்ளிக்குடி, செம்படவன்காடு, தம்பிக்கோட்டைகீழக்காடு வரை நடந்தது.

இதில் காங்கிரஸ் வட்டார தலைவர் வடுகநாதன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் மனோகரன், நகர செயலாளர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல நாகூர் அருகே வாஞ்சூர் ரவுண்டானாவில் இருந்து நாகை வழியாக பரவை வரை கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் மதிவாணன், தமிமுன் அன்சாரி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் மாரிமுத்து, நாகை மாலி, தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் தனபாலன், விவசாயிகள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் சரபோஜி, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அய்யாபிள்ளை, தி.மு.க. நகர செயலாளர் போலீஸ் பன்னீர் உள்பட விவசாய சங்கத்தினர், அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, புதுப்பள்ளி, வேட்டைகாரணிருப்பு, திருப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 

Next Story