ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு மறைமுகமாக ஆதரிக்கிறது பழ.நெடுமாறன் பேட்டி


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு மறைமுகமாக ஆதரிக்கிறது பழ.நெடுமாறன் பேட்டி
x
தினத்தந்தி 23 Jun 2019 11:00 PM GMT (Updated: 23 Jun 2019 7:28 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு மறைமுகமாக ஆதரிக் கிறது என்று, முத்துப்பேட்டையில் பழ.நெடுமாறன் கூறினார்.

முத்துப்பேட்டை,

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பேரழிப்புக்கு எதிரான பேரியக்கத்தினர் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் 7½ கோடி தமிழர்களுக்கு சோறு போடும் நெற்களஞ்சியத்தை அழிக்கும் திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு மறைமுகமாக ஆதரவு அளிக்கிறது. . ஆயிரம் ஆண்டுகளாக வளம்கொழிக்கும் டெல்டா பகுதியில் இத்திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும். அதற்கு எதிராக கட்சி வேறுபாடின்றி அனைவரும் போராட வேண்டும்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது இத்திட்டம் குறித்து ஆய்வு செய்து இதன் ஆபத்தை உணர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. இன்றைய அரசு இதற்கு நேர்மாறாக செயல்பட்டு வருகிறது. தமிழக விவசாயிகளுக்கு எதிரான இத்திட்டத்தை செயல்படுத்த கூடாது என அரசு உடனடியாக தடை ஆணை பிறப்பிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஓரணியில் திரண்டு மத்திய- மாநில அரசுகளுக்கு எதிராக போராடும் நிலை உருவாகும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story