வெடி விபத்தில் 3 பேர் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது


வெடி விபத்தில் 3 பேர் பலி: பட்டாசு ஆலை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Jun 2019 3:45 AM IST (Updated: 24 Jun 2019 1:42 AM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்தூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ளது பெரிய ஜோகிப்பட்டி. இங்கு பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. நேற்று முன்தினம் மாலை அந்த ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணிபுரிந்து வந்த சாமல்பட்டியைச் சேர்ந்த அமீத் (வயது 30), ஆசியா (40), அங்கையர்கண்ணி (45) என்ற 3 பேர் பலியானார்கள். மேலும் அன்வர்பா‌ஷா (45), இம்ரான் (30) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று ஆலையில் தீ மேலும் பரவாமல் தடுக்க தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் உள்ள ஒரு குடோன் தரைமட்டமானது. 2 குடோன்கள் சேதம் அடைந்தது. இதுதொடர்பாக இம்ரான் கொடுத்த புகாரின் பேரில், மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆலையின் மேற்பார்வையாளர் சாமல்பட்டியைச் சேர்ந்த ரிஸ்வான் பா‌ஷாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

இது தொடர்பாக மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்பாண்டி மற்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், பட்டாசு ஆலையில் போதிய தீத் தடுப்பு சாதனங்கள் இன்றி ஆலை இயங்கி வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆலையின் உரிமையாளர் ஊத்தங்கரை நாராயண நகரைச் சேர்ந்த ர‌ஷிக் (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடி விபத்தில் படுகாயம் அடைந்த அன்வர்பா‌ஷா, இம்ரான் ஆகிய 2 பேருக்கும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story