மாவட்டத்தில் 9 ஆண்டுகளில் 95 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி அமைச்சர் தங்கமணி தகவல்


மாவட்டத்தில் 9 ஆண்டுகளில் 95 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி அமைச்சர் தங்கமணி தகவல்
x
தினத்தந்தி 23 Jun 2019 11:00 PM GMT (Updated: 23 Jun 2019 8:39 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளில் 95 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

நாமக்கல்,

நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அதிகாரி உஷா வரவேற்று பேசினார். ஏ.கே.பி. சின்ராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினர்.

பின்னர் விழாவில் அமைச்சர் தங்கமணி பேசும்போது கூறியதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 9 ஆண்டுகளில் சுமார் 95 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 9 ஆயிரத்து 400 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 24 சதவீதமாகவும், தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 48 சதவீதமாகவும் உள்ளன. இதற்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டமும் ஒரு காரணம் ஆகும்.

மாவட்டத்தில் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி விகிதம் 19-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதற்காக நான் ஆசிரியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக நாமக்கல் பகுதியில் 3 பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சியை பெற்று இருப்பதாக அறிகிறேன். இது வருத்தம் அளிப்பதாக உள்ளது. அடுத்த ஆண்டு இந்த பகுதியில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க ஆசிரியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் போது நாமக்கல் மாவட்டம் மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த விழாவில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் நாமக்கல் கல்வி மாவட்ட அலுவலர் உதயகுமார் நன்றி கூறினார்.

மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ்-2 படிக்கும் நாமக்கல் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 1,352 பேர், குமாரபாளையம் தொகுதியை சேர்ந்த 1,451 பேர், திருச்செங்கோடு தொகுதியை சேர்ந்த 1,516 பேர், பரமத்தி தொகுதியை சேர்ந்த 1,366 பேர், ராசிபுரம் தொகுதியை சேர்ந்த 1,941 பேர், சேந்தமங்கலம் தொகுதியை சேர்ந்த 1,796 பேர் என மொத்தம் 9 ஆயிரத்து 422 மாணவ, மாணவி களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story