ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடலூரில் அனைத்து கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்


ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடலூரில் அனைத்து கட்சியினர் மனித சங்கிலி போராட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2019 4:45 AM IST (Updated: 24 Jun 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி கடலூரில் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

கடலூர்,

ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அனைத்து கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை மனிதசங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது.

கடலூரில் தி.மு.க. கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. கடலூர் உழவர் சந்தை அருகில் உள்ள சிக்னலில் இருந்து பெரியார் சிலை வரைக்கும் அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினரும் ஒருவரது கையை இன்னொருவர் கோர்த்தபடி நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றனர்.

இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் து.தங்கராசு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இள.புகழேந்தி, கோ.அய்யப்பன், நகரசெயலாளர் கே.எஸ்.ராஜா, ஒன்றிய செயலாளர்கள் சுப்புராம், காசிராஜன், வி.ஆர்.அறக்கட்டளை நிறுவனர் விஜயசுந்தரம், மாவட்ட டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பிரகாஷ், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் வக்கீல் சந்திரசேகரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ராமலிங்கம், தமிழக வாழ்வுரிமை கட்சி தெற்கு மாவட்டசெயலாளர் அறிவழகன், மாநில மாணவர் அணி செயலாளர் அருள்பாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், விவசாய தொழிலாளர் சங்கம் மாதவன், இந்திய கம்யூனிஸ்டு மாநில நிர்வாக குழு உறுப்பினர் மணிவாசகம், மாவட்ட செயலாளர் துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனைசெல்வன், பாராளுமன்ற தொகுதி செயலாளர் தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறும்போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டை பாலைவனமாக்குகின்ற சக்திகளை எதிர்த்து முதல் கட்டமாக மனிதசங்கிலி பேராட்டம் நடைபெறுகிறது. வரும் காலத்தில் டெல்டாபகுதிகளில் உள்ள கிராமங்கள் தோறும் எழுச்சிமிகுந்த போராட்டமாக இது விரிவடையும். அந்த போராட்டத்தில் நாங்கள் கலந்துகொண்டு திட்டத்தை தடுத்து நிறுத்துவோம் என்றார்.

தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யும் வரை அனைத்து கட்சிகளின் ஒருங்கிணைப்புடன் போராட்டம் தொடரும் என்றார் அவர்.

அதேபோல் ஹைட்ரோகார்பன், சாகர்மாலா திட்ட எதிர்ப்பு இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து கடலூர் பெரியார் சிலை அருகில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மீனவர் விடுதலை வேங்கை நிறுவன அமைப்பாளர் மங்கையர்செல்வன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.கே.சேகர், அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறாகுமார், வக்கீல் திருமார்பன், தமிழ்நாடுமீனவர் பேரவை சுப்புராயன் உள்பட பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

சிதம்பரம் தெற்கு ரத வீதியில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமை தாங்கினார். போராட்டத்தில் துரை.கி.சரவணன் எம்.எல்.ஏ., மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கே.வி.இளங்கீரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் நகர்.பெரியசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பால.அறவாழி, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் மு.முடிவண்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி வி.எம்.சேகர் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.


Next Story