எரிசாராயம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
சின்னசேலம் அருகே எரிசாராயம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே பைத்தந்துறை கிராமத்தில் சிலர் எரிசாராயம் விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது. இதை அருந்துவதால் அப்பகுதி மக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், எரிசாராய விற்பனை தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் எரிசாராயம் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று பைத்தந்துறை பஸ் நிறுத்தத்தில் ஒன்று திரண்டனர். தொடர்ந்து அவர்கள் சின்னசேலத்தில் இருந்து கச்சிராயப்பாளையம் நோக்கி சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள், இங்கு எரிசாராயம் விற்பனை செய்வதால் கிராமத்தில் பலர் பாதிக்கப்படுகின்றனர். எனவே எரிசாராயம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.