மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு வளர்ச்சி சார்ந்த பட்ஜெட்டை முதல்–அமைச்சர் சமர்ப்பிக்க வேண்டும் முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்


மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு வளர்ச்சி சார்ந்த பட்ஜெட்டை முதல்–அமைச்சர் சமர்ப்பிக்க வேண்டும் முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Jun 2019 4:45 AM IST (Updated: 24 Jun 2019 4:42 AM IST)
t-max-icont-min-icon

மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு வளர்ச்சி சார்ந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி,

 புதுச்சேரி முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நடப்பு நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு தொடர்பாக முதல்–அமைச்சர் நடத்தியுள்ள ஆலோசனை கூட்டங்கள் வரவேற்கத்தக்கது. நிதிநிலை அறிக்கை என்பது இலவசங்கள் கொடுப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டது அல்ல. புதுவை பொருளாதாரத்தின் அங்கமான விவசாயம், தொழில்கள், சேவைத்துறை, அகக்கட்டுமானம், மீன்வளம், கால்நடை வளம், கல்வி, மருத்துவம் ஆகியவற்றின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் கருவியாக திகழ்கிறது.

எனவே பட்ஜெட் தயாரிப்பு தொடர்பான ஆலோசனையில் புதுவையில் தற்போதைய பொருளாதார நிலை என்ன? அதை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் என்ன? அடுத்த ஆண்டிற்கான பொருளாதார இலக்கு என்ன? என்பதை பற்றி ஒரு விஞ்ஞான பூர்வமான அறிக்கை மாநிலத்தின் நலனை கருதி விவாதிக்கப்பட்டு இருக்க வேண்டும். இதனை உள்வாங்காத பட்ஜெட் சம்பளம், ஓய்வூதியம், அலவன்சஸ், பழைய பாக்கிகள், வட்டி கட்டுதல் பற்றிய ஒரு வெற்று அறிக்கையாக தான் இருக்குமே தவிர வேலைவாய்ப்பை உருவாக்கும் உண்மையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்காது. கடந்த ஆண்டுகளில் பட்ஜெட் மூலம் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள நன்மைகள் என்ன என்பதை அடிப்படையாக கொண்டு விவாதம் நடைபெற்றிருக்க வேண்டும்.

தற்போது உள்ள நிதிநிலை நெருக்கடி மற்றும் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஒரு சில திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். ஒவ்வொரு துறைக்கும் அரசு கொடுக்கும் நிதியை கூட்டி கழித்து நிதிநிலை அறிக்கையையும், திட்டங்களையும் உருவாக்கும் முறையை அரசு இப்போதாவது விட்டொழிக்க வேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து முழு பட்ஜெட்டை சமர்ப்பிக்காமல் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ததால் புதுவை மாநிலம் முழு அளவிலான வளர்ச்சியை அடையவில்லை.

தற்போது பொறுப்பேற்றுள்ள மத்திய அரசு எல்லா மாநில அரசுகளும் பொறுப்பான செலவு முறையை கையாள வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இதன் அடிப்படையில் பெரும்பாலான மாநில அரசுகள் சட்டங்கள் ஏற்றியுள்ளன. புதுச்சேரி அரசு அதை செய்ய மறுப்பதாலேயே பல பிரச்சினைகள் மத்தியில் இருந்து வருகிறது. எனவே புதுவை அரசு நிதி பொறுப்புடைமை மற்றும் நிதி மேலாண்மை சட்டத்தையோ அல்லது அதற்கு ஒப்பான ஒரு சட்டத்தையோ உருவாக்க வேண்டும். பல முக்கிய பிரச்சினைகளை மனதில் வைத்து நீர்ப்பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், போன்றவற்றை கருத்தில் கொண்டு ஒரு நல்ல வளர்ச்சி சார்ந்த பட்ஜெட்டை முதல்–அமைச்சர் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story