ஊஞ்சலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை திருட்டு; மர்மநபர்களுக்கு வலைவீச்சு
ஊஞ்சலூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஊஞ்சலூர்,
ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே தெற்கு புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 61). இவருடைய மனைவி செல்லாத்தாள் (52). பெரியசாமி தாமரைப்பாளையம் பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். அதன்படி நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு பெரியசாமியும், செல்லாத்தாளும் மளிகைக்கடைக்கு சென்றுவிட்டனர். பின்னர் மதியம் அவர்கள் 2 பேரும் வீட்டுக்கு வந்தனர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 2 பேரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டுக்குள் இருந்த பீரோ திறந்து கிடந்ததோடு, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் கட்டில் மெத்தையின் கீழ் வைக்கப்பட்டு இருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.13 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்று உள்ளனர். இதேபோல் பெரியசாமி வீட்டின் அருகே உள்ள ஈஸ்வரி (52) என்பவரின் வீட்டிலும் கொள்ளையடிக்க முயன்று உள்ளனர். ஆனால் அந்த வீட்டில் நகை–பணம் எதுவும் இல்லாததால் மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்று உள்ளனர்.
இதுகுறித்து பெரியசாமி கொடுமுடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று திருட்டு நடந்த வீட்டை பார்வையிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.