நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: காதல் திருமணம் செய்த பெண் 2 மகன்களுடன் தீக்குளிக்க முயற்சி


நாகை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: காதல் திருமணம் செய்த பெண் 2 மகன்களுடன் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 25 Jun 2019 4:30 AM IST (Updated: 25 Jun 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாகை கலெக்டர் அலுவலகத்தில், காதல் திருமணம் செய்த பெண், 2 மகன்களுடன் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நாகப்பட்டினம்,

நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கலெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் மனு கொடுப்பதற்காக வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது 2 மகன்களுடன் நாகை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

நுழைவு வாயிலுக்கு வந்தவுடன் அந்த பெண் தனது சேலையில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து திடீரென தன் மீதும், தனது மகன்கள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், 3 பேரையும் மீட்டு அருகில் இருந்து தண்ணீர் தொட்டிக்கு அழைத்து சென்று அவர்கள் மீது இருந்த மண்எண்ணெய்யை கழுவி விட்டனர்.

தொடர்ந்து நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், தீக்குளிக்க முயன்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது பெயர் சாந்தி(வயது 34). தஞ்சை மாவட்டம் கும்பகோணம் எனது சொந்த ஊர். நானும், நாகை அருகே உள்ள கங்களாஞ்சேரியைச் சேர்ந்த தென்கோவன்(40) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இரண்டு பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

எங்களுக்கு வசந்த கோவன்(15), சாமுவேல்(12) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். நாங்கள் திட்டச்சேரி கோதண்டராஜபுரம் மேலத்தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எனது கணவர் வெளியூரில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் மற்றும் அருகில் உள்ள சிலர், நீ தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பது இப்பொழுது தான் எங்களுக்கு தெரிய வந்தது. எனவே வீட்டை காலி செய்து விட்டு வேறு எங்காவது சென்று விடு என்று கூறினார்கள்.

அதற்கு நான் அவர்களிடம், எனது மகன்கள் இருவரும் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்கள். திடீரென வீட்டை காலி செய்யுமாறு கூறினால், எனது மகன்களின் படிப்பு பாதிக்கப்படும் என்று கூறினேன். ஆனால் அவர்கள், எனது சாதி பெயரை சொல்லி என்னை இழிவாக பேசியதுடன், எனது மகன்களையும் அடித்து ஊரை விட்டு செல்லும்படி கூறினர். இது குறித்து திட்டச்சேரி போலீசாரிடம் கடந்த 22-ந் தேதி புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நான் வீட்டில் இருந்தபடியே எனது மகன்களுடன் தற்கொலை செய்து கொண்டு இருப்பேன். ஆனால் நான் எதற்காக தற்கொலை செய்து கொண்டேன் என்று யாருக்கும் தெரியாது. நான் இதை தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் தற்கொலை செய்து கொள்ள கலெக்டர் அலுவலகம் வந்தேன். என்னையும், எனது மகன்களையும் சாதி பெயரைச் சொல்லி இழிவாக பேசி தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் போலீசார் விசாரணையில் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து அவர்களை நாகூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து நாகூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை கலெக்டர் அலுவலகத்தில் 2 மகன்களுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story