மின்வாரிய வணிக ஆய்வாளர் பதவி உயர்வில் முறைகேடு; நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் புகார்


மின்வாரிய வணிக ஆய்வாளர் பதவி உயர்வில் முறைகேடு; நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் புகார்
x
தினத்தந்தி 25 Jun 2019 4:45 AM IST (Updated: 25 Jun 2019 12:18 AM IST)
t-max-icont-min-icon

மின்வாரிய வணிக ஆய்வாளர் பதவி உயர்வில் முறைகேடு நடந்துள்ளதால், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் திருப்பூர் மாவட்ட அமைப்புசாரா, கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் புகார் மனு கொடுத்துள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமியிடம் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:–

திருப்பூர் மாவட்டத்தில், மின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக கள பணியாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களுக்கு முறையான பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் அவர்களுக்கு மின்பாதை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நிலையில் விதிகளுக்கு புறம்பாக வணிக உதவியாளர் பதவியில் இருப்பவர்களுக்கு, வணிக ஆய்வாளர் பதவி உயர்வாக பதவி உயர்வு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. இதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒப்பந்த தொழிலாளர்களையும் உடனடியாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெள்ளக்கோவில் ரெட்டிவலசு 2–வது வார்டு பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகின்றனர். எங்கள் பகுதிக்கு பள்ளிக்கூட வசதியோ, சாலை வசதியோ இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை.

திருமங்கலம் ரோட்டில் இருந்து ரெட்டிவலசு செல்லும் சாலையில் தெருவிளக்கு வசதி இல்லாமல் இருந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் பெண்கள், குழந்தைகள் அந்த பகுதி வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். சாக்கடை வசதிகளும் இல்லாத நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆதித்தமிழர் சனநாயக பேரவை சார்பில் குண்டடம் ஊராட்சி குங்குமபாளையம் பகுதி பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், எங்கள் பகுதியில் 100–க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் ஆதிதிராவிடர்கள் அதிகமானோர் வசித்து வருகின்றனர். கடந்த பல வருடங்களாக அந்த பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு வீட்டுமனை இல்லை. இதனால் அவர்கள் இருக்கும் பகுதியை நத்தம் நில வகையாக மாற்றம் செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இங்கு நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை போக்க காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் எங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், குங்குமபாளையம் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெயரில் ஒருசிலர் எங்கள் ஊரில் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அவர்களிடம் கேட்டால், எங்களுக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.


Next Story