வறட்சியால் வரத்து குறைந்தது: காய்கறி விலை கிடு, கிடு உயர்வு ஒரு கட்டு கீரை ரூ.30-க்கு விற்பனை


வறட்சியால் வரத்து குறைந்தது: காய்கறி விலை கிடு, கிடு உயர்வு ஒரு கட்டு கீரை ரூ.30-க்கு விற்பனை
x
தினத்தந்தி 24 Jun 2019 11:15 PM GMT (Updated: 24 Jun 2019 7:02 PM GMT)

வறட்சி காரணமாக வரத்து குறைந்ததால் காய்கறி விலை கிடு, கிடு வென உயர்ந்துள்ளது. ஒரு கட்டு கீரை ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

உடல் ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் கீரை வகைகளை ஒரு காலத்தில் பெரும்பாலானோர் தங்களுடைய உணவு பட்டியலில் இருந்து ஒதுக்கி வைத்து வந்தனர். வாழ்க்கை முறை மாற்றத்தால் ஆரோக்கியமான வாழ்வுக்கு உணவில் கீரை வகைகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பெரும்பாலானவர்களின் உணவு பட்டியலில் கீரை வகைகள் முக்கிய இடத்தை பிடித்துவிட்டன.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காஞ்சீபுரம், திருவள்ளூர், ஓசூர், குடியாத்தம், திருவண்ணாமலை உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும், ஆந்திர மாநிலத்தில் இருந்தும் கீரைகள் வருகிறது. வறட்சி காரணமாக கீரை விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்து கீரை வகைகளின் விலையும் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்துகொண்டே வருகிறது.

கட்டு ரூ.30-க்கு விற்பனை

கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் சிறு கீரை, முளை கீரை, அரை கீரை, தண்டங்கீரை, பொன்னாங்கன்னி கீரை, பசலை கீரை உள்ளிட்ட பல்வேறு கீரை வகைகள் (ஒரு கட்டு) நேற்று ரூ.10 முதல் ரூ.15 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. இது சில்லரை விற்பனை கடைகளில் ரூ.25 முதல் ரூ.30 வரையிலும் விற்பனையாகியது. கீரை விற்பனை சென்னை பிராட்வே பஸ் நிலையம், சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட்டிலும் களை கட்டுகிறது.

இதேபோல பிற காய்கறிகளின் விலையும் கிடு, கிடு வென உயர்ந்துள்ளது. காய்கறி விலையை கேட்டாலே பெரும்பாலான குடும்ப தலைவிகளுக்கு தற்போது அதிர்ச்சி தான் ஏற்படுகிறது.

காரணம் என்ன?

இதுகுறித்து கோயம்பேடு மொத்த மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சராசரியாக 25 லோடு லாரிகளில் கீரை வந்துகொண்டிருந்தது. வறட்சியின் காரணமாக பெரும்பாலான இடங்களில் உள்ள விளை நிலங்கள் தரிசு நிலங்களாக மாறிவிட்டன. இதனால் கீரை வரத்து கணிசமாக குறைந்துள்ளது. தற்போது 10 லோடு லாரிகளில் மட்டுமே கீரை வருகிறது.

மழை பெய்து பூமி நனைந்தால் தான் கீரை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் உள்பட பல்வேறு காய்கறிகளின் விளைச்சல் அதிகரித்து விலை குறைய வாய்ப்பு இருக்கிறது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளதால் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் காய்கறிகளின் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. விற்பனையும் மந்தம் அடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரைக்காய்-மிளகாய்

கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி காய்கறி விலை (கடந்த வார விலை அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளது) நிலவரம் கிலோவில் வருமாறு:-

பீன்ஸ் ரூ.100 முதல் ரூ.110 (ரூ.90 முதல் ரூ.100), அவரைக்காய் ரூ.80 (ரூ.60), முட்டைகோஸ் ரூ.20 (ரூ.25), வெங்காயம் ரூ.20 (ரூ.25), சாம்பார் வெங்காயம் ரூ.40 முதல் ரூ.50 (ரூ.50), கேரட் ரூ.40 முதல் ரூ.50 (ரூ.50 முதல் ரூ.60), நூக்கல் ரூ.50 (ரூ.40), சேனைக் கிழங்கு ரூ.25 (ரூ.30), முருங்கைக்காய் ரூ.20 (ரூ.25), பச்சை மிளகாய் ரூ.80 (ரூ.60), பீட்ரூட் ரூ.30 (ரூ.25), காலிபிளவர் ரூ.35 (ரூ.30), உருளைக்கிழங்கு ரூ.20 (ரூ.18), பச்சை பட்டாணி ரூ.130 (ரூ.110), வெண்டைக் காய் ரூ.40 (ரூ.35), முள்ளங்கி ரூ.25 (ரூ.20), பாகற்காய் ரூ.50 முதல் ரூ.60 (ரூ.40), கொத்தமல்லி ரூ.15 (ரூ.30), தேங்காய் ஒன்று ரூ.25 (ரூ.25), வாழைக் காய் (ஒன்று) ரூ.8 (ரூ.7)-க்கு விற்பனையாகியது.

Next Story