மத்திய அரசின் சட்டத்தை அமல்படுத்தாத மணல் திருட்டுக்கு ஆதரவாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை; அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்


மத்திய அரசின் சட்டத்தை அமல்படுத்தாத மணல் திருட்டுக்கு ஆதரவாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை; அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Jun 2019 11:00 PM GMT (Updated: 24 Jun 2019 7:41 PM GMT)

மணல் திருட்டுக்கு ஆதரவாக இருப்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்திய அரசின் திட்டங்களை புறக்கணிப்பதால் புதுவையில் வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் சார்ந்த உயர்கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீட்டினை அறிவித்தது. அதனை நாடாளுமன்றத்தில் சட்டமாக்கியும் கொண்டு வந்தனர்.

அதன் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் 50 இடங்களை அதிகமாக்கவும், அதில் 10 சதவீத இடங்களை பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வழங்கவும் ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. இந்த சட்டத்தினை தமிழகம் மற்றும் காங்கிரஸ் ஆளும் பிற மாநிலங்களில் ஏற்று அமல்படுத்தி உள்ளனர்.

ஆனால் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரியில் அதை நடைமுறைப்படுத்த முதல்–அமைச்சர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசு இதுதொடர்பாக கடிதம் அனுப்பியும் அதை முழுமையாக புறக்கணித்து உள்ளனர். புதுவை மாநில மாணவர்களின் நலனை கருத்தில்கொள்ளாமல் ஏழைகளுக்கு முதல்–அமைச்சர் அநீதி இழைத்துள்ளார். மத்திய அரசின் சட்டத்தை மதிக்காமல், அதை அமல்படுத்தாத புதுவை அரசை டிஸ்மிஸ் செய்யவேண்டும்.

புதுவையில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்துகொண்டே உயர்த்தப்பட்ட கட்டணங்களை குறைக்கக்கோரி போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க. கூறி வருகிறது. அவர்களுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருந்தால் இந்த ஆட்சிக்கு வழங்கும் ஆதரவினை வாபஸ் வேண்டும்.

வில்லியனூர்–திருக்காஞ்சி பகுதியில் மணல் கடத்தல் தொடர்பாக 10–க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளன. மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களுக்கு அமைச்சர்களும் ஆதரவாக உள்ளனர். மணல் திருட்டுக்கு ஆதரவாக இருப்பவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story