ஊட்டியில் குறைதீர்க்கும் கூட்டம், எல்க்ஹில் பகுதிக்கு ஆட்டோக்களை இயக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
எல்க்ஹில் பகுதிக்கு ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊட்டியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
ஊட்டி,
ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மற்றும் குறைகளை மனுக்களாக எழுதி கொடுத்தனர். அதன்படி ஊட்டி எல்க்ஹில், ஆர்.கே.புரம், குமரன் நகர், மகாத்மா காலனி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆட்டோக்களை இயக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
எங்கள் பகுதியில் போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், முதியோர்கள் மருத்துவமனைக்கு சென்று வரவும், பொதுமக்கள் வேலைக்கு சென்று திரும்பவும் சுமார் 8 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஏ.டி.சி.யில் இருந்து எல்க்ஹில் பகுதிக்கு ஆட்டோவை வாடகைக்கு எடுக்கும் பட்சத்தில் ரூ.150 முதல் ரூ.200 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நாங்கள் தினக்கூலிக்கு வேலைக்கு செல்வதால், அவ்வளவு தொகையை செலுத்த முடிவது இல்லை. ஆனால் எல்க்ஹில் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள் ரூ.90 கட்டணம் வசூலித்து வந்தனர். இதற்கிடையே கடந்த சில வாரங்களாக அவர்களும் அப்பகுதிக்கு ஆட்டோ இயக்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது, எல்க்ஹில் பகுதிக்கு ஆட்டோக்களை ஓட்டக்கூடாது என்று சங்கத்தினர் கூறியதாக தெரிவித்தனர். அதன் காரணமாக அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே ஆட்டோ ஓட்டுனர்களை மீண்டும் அதே கட்டணத்தில் எல்க்ஹில் பகுதிக்கு ஆட்டோக்களை இயக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
ஊட்டி அருகே கோழிப்பண்ணை கிராம மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கக்கோரி மனு கொடுத்தனர். அந்த மனுவில், தொட்டபெட்டா ஊராட்சிக்கு உட்பட்ட கோழிப்பண்ணையில் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. அங்கிருந்து மார்லிமந்து, மேல்வீடு, கோழிப்பண்ணை, ஊராட்சி பள்ளி ஆகிய இடங்களில் உள்ளவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது மக்கள்தொகை அதிகரித்து உள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் குறைவாக இருக்கிறது. இதனால் குடிநீர் இன்றி நாங்கள் அவதி அடைந்து வருகிறோம். அப்பகுதி வழியாக பைக்காரா கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. அதில் இருந்து குடிநீர் இணைப்பு வழங்கி, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
புது கோத்தகிரியை சேர்ந்த கோத்தர் இன பெண் சாமுண்டீஸ்வரி அளித்த மனுவில், எனது குடும்பம் வாழ்ந்து வந்த இடத்தில் சிலர் அத்துமீறி சமையல் கூடம் கட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். பின்னர் பிரச்சினை காரணமாக சமையல் கூடம் இடிக்கப்பட்டது. ஆனால் யாருக்கும் இடையூறு இல்லாமல், ஊருக்கு ஒதுக்குப்புறமாக கட்டி தர முன்வந்தபோது, மக்கள் மறுத்துவிட்டனர். திருமணம் ஆகாத எனக்கு வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 215 மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் கீழ்குந்தா பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரின் மகளுக்கு கல்லூரி கட்டணம் செலுத்துவதற்காக மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதியில் இருந்து ரூ.12 ஆயிரத்துக்கான காசோலை, குன்னூர் சந்திரா காலனியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதற்காக முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரத்துக்கான காசோலை, குன்னூர் வெலிங்டன் பகுதியை சேர்ந்த தேவி என்பவருக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் விலையில்லா எம்பிராய்டரி எந்திரம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story