கோவையில் துணிகரம், சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி - தப்பியோடிய 4 பேருக்கு வலைவீச்சு


கோவையில் துணிகரம், சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி - தப்பியோடிய 4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Jun 2019 4:45 AM IST (Updated: 25 Jun 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். பிடிபட்ட ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை,

கோவை பீளமேடு அரசு மருத்துவக்கல்லூரி அருகே நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு இருட்டான பகுதியில் ஒரு கார் நின்றிருந்தது. காரில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த ரோந்து போலீசார் அந்த ஆசாமியை பிடித்து விசாரித்தனர். அதற்கு அவர் தன்னுடைய பெயர் சந்திரன் (வயது 31) வாழப்பாடியை சேர்ந்தவர் என்றும், தன்னை 4 பேர் காரை எடுத்துக்கொண்டு வரச்சொன்னார்கள். அதன்பேரில் தான் வந்துள்ளேன். இங்கிருந்து அவர்கள் திருச்சூர் செல்ல வேண்டும் என்று கூறியதாகவும், என்னை வரச்சொன்ன 4 பேர் உள்ளே சென்றிருக்கிறார்கள் என்றும் கூறினார்.

அவர் கூறியதில் சந்தேகம் அடைந்த ரோந்து போலீசார் உடனே அந்த ஆசாமி காட்டிய பகுதிக்கு சென்றனர். அங்கு சந்தன மரத்துண்டுகள் கிடந்தன. யாரையும் காணவில்லை. மர்ம ஆசாமிகள் யாரோ அங்கு வளர்ந்திருந்த சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து சந்தன மரத்துண்டுகளை போலீசார் எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். அந்த காரில் சோதனையிட்டபோது கோடாரி, ஆக்சா பிளேடு ஆகியவையும் இருந்தன. எனவே காரில் வந்தவர்கள் சந்தன மரக்கடத்தல் கும்பல் என்று உறுதி செய்த ரோந்து போலீசார் காரில் இருந்த சந்திரன் மற்றும் வெட்டப்பட்ட சந்தன மரத்துண்டுகள், கார் ஆகியவற்றை பீளமேடு போலீசில் ஒப்படைத்தனர். மேலும், சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற 4 பேரை போலீசார் வலைவீசி தேடினார்கள். அதன்பின்னர் அந்த வழக்கு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

சந்திரனை வரச்சொன்ன சந்தன மரக்கடத்தல் ஆசாமிகள் யார்? என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story