தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு பாடையுடன் இந்து எழுச்சி முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு இந்து எழுச்சி முன்னணியினர் பாடையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி,
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்நிலையில் இந்து எழுச்சி முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு பாடையை தூக்கி வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் உள்ள மயானத்தில் சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும், அந்த நிலத்தை பாதுகாத்து நகராட்சி நிர்வாகம் மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு அனுமதியின்றி பாடையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் பாடையை ஒரு ஓரத்தில் வைத்து விட்டு, கலெக்டர் பல்லவி பல்தேவிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் மயானம், சுடுகாடு போன்றவை அமைந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நவீன எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்கு வந்ததால் பாரம்பரிய சுடுகாடு, மயானம் பயன்பாடு இன்றி உள்ளது. இந்நிலையில் பயன்பாடு இன்றி உள்ள மயான நிலம் நகராட்சியின் மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பொம்மையகவுண்டன்பட்டியில் நகராட்சி குடியிருப்பு பின்புறம் இருந்த எரியூட்டு கொட்டகையை அகற்றிவிட்டு அங்கு குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டுள்ளது.
அதே பகுதியில் 1 ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு உள்ளது. இது தற்போது பயன்பாடு இன்றி உள்ளது. இங்கு நிறைய காலி இடம் உள்ளது. மாலை நேரங்களில் இங்கு சமூக விரோத செயல்கள் நடக்கிறது. திறந்தவெளி பார் ஆக பயன்படுத்துவதும், போதைப் பொருட்களை பயன்படுத்தும் இடமாகவும் உள்ளது. அத்துடன் நள்ளிரவு நேரங்களில் விபசாரமும் நடந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, பயன்பாடு இல்லாத இந்த சுடுகாடு அமைந்துள்ள நிலத்தை நகராட்சி நிர்வாகம் கைப்பற்றி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story