குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தோகைமலை, தரகம்பட்டியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி தோகைமலை, தரகம்பட்டியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2019 11:00 PM GMT (Updated: 24 Jun 2019 8:25 PM GMT)

சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி தோகைமலை, தரகம்பட்டியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தோகைமலை,

கரூர் மாவட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்ககோரியும், சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும் மாவட்ட தி.மு.க சார்பில் தோகைமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. வி.செந்தில் பாலாஜி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

குளித்தலை தொகுதியில் உள்ள தோகைமலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் குளித்தலை ஒன்றிய பகுதியில் உள்ள கிராம பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த பகுதிகளுக்கு குளித்தலை காவிரியில் இருந்து குடிநீர் வழங்க நடைபெறும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள் வேலை தாமதம் அடைந்து வருகிறது. இந்த பணியை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் வழங்க வேண்டும். அப்படி குடிநீர் வழங்க வில்லை என்றால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் குளித்தலை எம்.எல்.ஏ ராமர், பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்யக்கோரி தரகம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. வி.செந்தில் பாலாஜி தலைமை தாங்கி, பேசுகையில், தமிழகத்தில் குடிநீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. இதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. தி.மு.க. ஆட்சி காலத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கடவூர் தாலுகா அலுவலகம் என பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டுள்து. அதன் அடிப்படையில் விரைவில் கடவூர் ஒன்றியத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற உடனே அரசு கலைக் கல்லூரி தொடங்கப்படும். நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பவர் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆவார். என்றார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story