தேங்காப்பட்டணத்தில் ரூ.97½ கோடியில் கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகம் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்


தேங்காப்பட்டணத்தில் ரூ.97½ கோடியில் கட்டப்பட்ட மீன்பிடி துறைமுகம் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 25 Jun 2019 4:30 AM IST (Updated: 25 Jun 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

தேங்காப்பட்டணத்தில் ரூ.97.40 கோடியில் கட்டப்பட்ட புதிய மீன்பிடி துறைமுகத்தை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்தார்.

புதுக்கடை,

குமரி மாவட்டத்தில் குளச்சல், சின்னமுட்டம், முட்டம் போன்ற இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இதையடுத்து தேங்காப்பட்டணத்தில் கடந்த 2010ம் ஆண்டு ரூ.97.40 கோடி செலவில் புதிதாக மீன்பிடி துறைமுகம் கட்டும் பணி தொடங்கியது. தற்போது பணிகள் முடிந்த நிலையில், புதிய மீன்பிடி துறைமுகத்தை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அப்போது, தேங்கப்பட்டணம் மீன்பிடி துறைமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர். நிகழ்ச்சியில், மீன்வளத்துறை இணை இயக்குனர் ஜெயக்குமார், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யாஹரி, அ.தி.மு.க. முன்சிறை ஒன்றிய செயலாளர் ஜீன்ஸ், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் சங்க செயற்குழு உறுப்பினர் ஜோர்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 500 விசைப்படகுகள் வரை மீன்பிடிக்க முடியும். இதன்மூலம் தேங்காப்பட்டணம், வள்ளவிளை, பூத்துறை, சின்னத்துறை, தூத்தூர், இரயுமன்துறை, முள்ளூர்துறை போன்ற பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் பயன் அடைவார்கள்.

மீனவர்கள் கோரிக்கை

முன்னதாக தேங்காப்பட்டணம் வந்த கலெக்டரை மீனவர்கள் சந்தித்து, தங்கள் பகுதிக்கு போதிய சாலை வசதி செய்து தர வேண்டும், சுகாதார சீர்கேட்டை தடுக்க வேண்டும், டீசல் தட்டுப்பாடு இன்றி கிடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மீனவர்களின் கோரிக்கை தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.


Next Story