வெளிநாட்டில் தவிக்கும் 2 பேரை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்


வெளிநாட்டில் தவிக்கும் 2 பேரை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2019 4:30 AM IST (Updated: 25 Jun 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் தவிக்கும் 2 பேரை மீட்டு தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் உறவினர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் காரங்காடு பகுதியை சேர்ந்தவர் மரியமிக்கேல் ராஜ். இவரும், இவருடைய உறவினர் குமார் என்பவரும் வெளி நாட்டுக்கு (சவுதி அரேபியா) வேலைக்கு சென்றனர். ஆனால் அங்கு அவர்களுக்கு சம்பளம் வழங்காமல் கொடுமைப்படுத்துவதாக கூறியும், எனவே அவர்களை மீட்டு தரும்படி கேட்டும் அவர்களுடைய உறவினர்கள் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால் இன்னும் அவர்கள் மீட்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மரியமிக்கேல் மற்றும் குமாரின் உறவினர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அங்குள்ள லூயி பிரெய்லி கூட்டரங்கு முன் தரையில் அமர்ந்து திடீரென காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி செயலாளர் அந்தோணிமுத்து தலைமையில் நடந்தது.

பாஸ்போர்ட் பறிப்பு

இதுபற்றி போராட்டம் நடத்தியவர்களிடம் கேட்டபோது கூறியதாவது:

மரியமிக்கேல் ராஜையும், குமாரையும் அதே பகுதியை சேர்ந்த ஒரு இடைத்தரகர் தான் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு அவர்களை வீட்டு வேலைக்கு பயன்படுத்துகிறார்கள். மேலும் சம்பளமும் கொடுக்கப்படுவது இல்லை. இந்த நிலையில் 2 பேரும் சொந்த ஊர் திரும்ப முடியாதபடி பாஸ்போர்ட் மற்றும் விசாவை பறித்துவிட்டனர். இதனால் அவர்களால் ஊருக்கு வர முடியவில்லை. எனவே 2 பேரையும் மீட்டு தருமாறும், அவர்களை வெளிநாட்டுக்கு ஏமாற்றி அனுப்பி வைத்த இடைத்தரகரை கைது செய்ய வலியுறுத்தியும் ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தோம்.

இதைத் தொடர்ந்து மனு மீது விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட இடைத்தரகரை கைது செய்யுமாறு கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் கலெக்டர் உத்தரவை போலீசார் மதிக்கவில்லை. அதாவது கலெக்டர் உத்தரவிட்ட பிறகும் இடைத்தரகரை போலீசார் கைது செய்யவில்லை. எனவே சம்பந்தப்பட்ட இடைத்தரகரை போலீசார் கைது செய்ய வேண்டும். மேலும் சவுதியில் தவிக்கும் 2 பேரின் சம்பள பாக்கி, பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவற்றை கொடுத்து பத்திரமாக மீட்டு தரவேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலெக்டரிடம் மனு

போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கலைந்து செல்லுமாறு அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.

இதைத் தொடர்ந்து அனைவரும் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து தங்களது கோரிக்கை தொடர்பாக பேசினர். பின்னர் கலெக்டரிடம் மனு அளித்து விட்டு புறப்பட்டு சென்றனர். இதனையடுத்து அங்கு ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது. 

Next Story