தனியார் பஸ் மோதி டீக்கடைக்குள் புகுந்த லாரி - பெண் உள்பட 3 பேர் படுகாயம்
வத்தலக்குண்டு அருகே தனியார் பஸ் மோதி டீக் கடைக்குள் லாரி புகுந்தது. இதில் பெண் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
வத்தலக்குண்டு,
வத்தலக்குண்டுவில் இருந்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நோக்கி பால் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அதன்பின்னால் மதுரை நோக்கி மற்றொரு லாரி மற்றும் தனியார் பஸ் சென்றது. வத்தலக் குண்டு-உசிலம்பட்டி சாலையில் விருவீடு அருகே வந்தபோது திடீரென தனியார் பஸ், லாரி மீது மோதியது. அந்த லாரி, பால் லாரி மீது மோதி சாலையோரத்தில் இருந்த ராஜேந்திரன் என்பவரின் டீக்கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் டீக்கடையில் நின்று கொண்டிருந்த விருவீட்டை சேர்ந்த காசம்மாள், செக்காபட்டியை சேர்ந்த தங்கவேலு, சென்மார்பட்டியை சேர்ந்த ராமராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மேலும் கடையின் முன்புறம் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளும் சேதம் அடைந்தது.
இதுமட்டுமின்றி டீக்கடையில் இருந்த கியாஸ் சிலிண்டர் லாரியின் அடிப்பகுதியில் சிக்கி கொண்டது. அந்த சிலிண்டர் வெடித்து விடுமோ? என்ற அச்சம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பாலக்குமரன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், சங்கரேஸ்வரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.
பின்னர் விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் களுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. பொக்லைன் எந்திரம் மூலம் லாரியை நகர்த்தி போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.
Related Tags :
Next Story