தும்பக்காடு வனத்துறை பள்ளியில், பழங்குடியின மாணவிகளுக்கு விடுதியில் இடம் அளிக்க மறுப்பு - நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் புகார்


தும்பக்காடு வனத்துறை பள்ளியில், பழங்குடியின மாணவிகளுக்கு விடுதியில் இடம் அளிக்க மறுப்பு - நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டரிடம் புகார்
x
தினத்தந்தி 24 Jun 2019 10:30 PM GMT (Updated: 25 Jun 2019 12:26 AM GMT)

ஜமுனாமரத்தூர் பழங்குடியினர் விடுதியில் தாங்கள் தங்கிப்படிக்க இடம் தர மறுப்பதாக குறைதீர்வு கூட்டத்தில் வனத்துறை மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் கலெக்டரிடம் புகார் அளித்தனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். இதில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கலந்து கொண்டு அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களை பெற்றார்.

இதில் கல்வி உதவித் தொகை, விதவை உதவித் தொகை, வீட்டு மனைப்பட்டா, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, சாதி சான்றிதழ், குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 1000-க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டர் உத்தரவிட்டார். மேலும் நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான விசாரணை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

செங்கம் தாலுகா பனைஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த பெண்கள் மற்றும் வாலிபர்கள் காலிக் குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்தவர்கள். எங்கள் பகுதியில் கடந்த 4 மாத காலமாக குடிநீர் பிரச்சினை உள்ளது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் குடிநீர் கிடைக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் எங்கள் கிராமத்தில் எந்த ஒரு குறைகள் சொன்னாலும் கண்டு கொள்வது இல்லை.

எங்கள் பகுதியில் துப்புரவு பணிகளும் நடைபெறுவது இல்லை. எங்கள் ஊரில் 6 கைப்பம்பு, 2 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இவை பழுதடைந்து உள்ளது. இதை சரி செய்து மோட்டார் அமைத்தால் எங்கள் குடிநீர் பிரச்சினை தீரும். மழை தண்ணீர் செல்லும் கால்வாய்கள் தூர்வார வில்லை. எனவே எங்கள் பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தீர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஜமுனாமரத்தூர் வனத்துறை மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நாங்கள் ஜமுனாமரத்தூர் அருகில் உள்ள தும்பக்காடு கிராமத்தில் உள்ள வனத்துறை மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகின்றோம்.

எங்கள் கிராமத்தில் இருந்து பள்ளிக்கு தினமும் சென்று வர சிரமமாக உள்ளது. எங்கள் கிராமத்தில் பள்ளிக்கு செல்ல 30 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. எங்களுக்கு ஜமுனாமரத்தூர் பழங்குடியினர் மாணவிகள் விடுதியில் தங்கி படிப்பதற்கு இடம் இல்லை என்று கூறுகிறார்கள். எனவே விடுதியில் தங்கி படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு கேட்டு கொள்கிறோம். விடுதியில் இடம் இல்லை என்றால் எங்களால் படிப்பை தொடர இயலாத சூழ்நிலையும் ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் திருவண்ணாமலை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story