சிதம்பரம் அருகே, வாய்க்காலில் பஸ் பாய்ந்து விபத்து - 26 பேர் படுகாயம்


சிதம்பரம் அருகே, வாய்க்காலில் பஸ் பாய்ந்து விபத்து - 26 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 25 Jun 2019 4:45 AM IST (Updated: 25 Jun 2019 5:56 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே தனியார் பஸ் வாய்க்காலில்பாய்ந்தது. இந்த விபத்தில் 26 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிதம்பரம், 

புதுச்சேரியில் இருந்து சிதம்பரம் வழியாக காரைக்கால் நோக்கி தனியார் பஸ் ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை பெரியப்பட்டு கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (வயது 39) என்பவர் ஓட்டிச்சென்றார். அந்த பஸ் சிதம்பரம் அருகே வேளக்குடி கிராம பகுதியில் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது.

மேலும் அந்த பஸ் சாலையோரத்தில் உள்ள வாய்க் காலில் பாய்ந்து கவிழ்ந்தது. இதில் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்த பயணிகள் வலியால் அலறி துடித்தனர். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதனிடையே இது குறித்த தகவலின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் காயம் அடைந்த பஸ் டிரைவர் வேல்முருகன், கண்டக்டரான திருவாரூர் மாவட்டம் கொள்ளுமாங்குடியை சேர்ந்த தினகரன் மற்றும் பயணிகளான புவனகிரியை சேர்ந்த ராணி (40), சீர்காழி அருகே ஆறுமுகவேலியை சேர்ந்த மனோண்மணி (47), பாப்பாத்தி, வள்ளுவங்குடி குணவதி (45), மயிலாடுதுறை நடராஜபுரத்தை சேர்ந்த ஜெயராமன் (38), திருவிடைமருதூர் பிரியா (30) உள்பட 26 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக 8 பேர் சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே வாய்க்காலில் பாய்ந்த பஸ்சை தீயணைப்பு துறையினர் மீட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story