மாங்காய் திருடியதை காட்டி கொடுத்த தையல் தொழிலாளி அடித்துக்கொலை 2 பேருக்கு வலைவீச்சு


மாங்காய் திருடியதை காட்டி கொடுத்த தையல் தொழிலாளி அடித்துக்கொலை 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 Jun 2019 11:15 PM GMT (Updated: 25 Jun 2019 4:56 PM GMT)

மணல்மேடு அருகே மாங்காய் திருடியதை காட்டி கொடுத்த தையல் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மணல்மேடு,

நாகை மாவட்டம் மணல்மேடு அருகே கொற்கை கிராமத்தை சேர்ந்தவர்கள் கணேசன் மகன் மாணிக்கவாசகம், கலியபெருமாள் மகன் குணசீலன். நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள முத்துப்பிள்ளை என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் மாணிக்கவாசகம், குணசீலன் ஆகிய இருவரும் சேர்ந்து மாங்காய்களை திருடி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அதே பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளியான கார்த்தி(வயது 35) என்பவர் பார்த்து மாங்காய்களை திருடி விற்பனை செய்தது குறித்து ஊர் பொதுமக்களிடம் கூறியுள்ளார்.


இதனால் அவமானம் அடைந்த மாணிக்கவாசகம், குணசீலன் ஆகிய இருவரும் சேர்ந்து கார்த்தியை பழிவாங்க முடிவு செய்தனர். அதன்படி இரவு தனியாக நின்று கொண்டிருந்த கார்த்தியிடம் அவர்கள் வாக்குவாதம் செய்தனர். அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த மாணிக்கவாசகம், குணசீலன் ஆகிய இருவரும் சேர்ந்து கார்த்தியை சரமாரியாக தாக்கினர்.

இதில் கார்த்தி நிலைதடுமாறி கீழே சாய்ந்தார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கார்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்தி பரிதாபமாக இறந்தார்.


இதுகுறித்து மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை அடித்துக் கொன்ற மாணிக்கவாசகம், குணசீலன் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்.

மாங்காய் திருடியதை காட்டிக் கொடுத்த தையல் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story