கோவில்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிக்கை


கோவில்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Jun 2019 4:00 AM IST (Updated: 26 Jun 2019 12:23 AM IST)
t-max-icont-min-icon

கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி, கோவில்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டி,

கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி, ஒரு லிட்டர் பசும்பாலுக்கு ரூ.40-ம், எருமை பாலுக்கு ரூ.50-ம் வழங்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் பால் குளிரூட்டும் நிலையங்களில் ஸ்கேனர் முறையில் பாலினை பரிசோதனை செய்து, இணையதளத்தின் மூலம் செயல்படுத்த வேண்டும். பாலின் தரத்தை வேண்டும் என்றே குறைத்து, விலையை குறைவாக நிர்ணயித்து, மோசடி செய்கிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து குளிரூட்டும் நிலையங்களிலும் கணினி மயமாக்கப்பட்ட பால் தரம் பார்க்கும் எந்திரத்தை பயன்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கு கொள்முதல் போனஸ் வழங்க வேண்டும். மாடு வளர்ப்பவர்களுக்கு தேசிய ஊரக வேலை திட்டத்தில் இலவச மாட்டு கொட்டகை அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் சார்பில், கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு நேற்று காலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சங்க மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் முகமது அலி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் பேசினர்.

மாவட்ட துணை தலைவர் மகாலிங்கம், பொருளாளர் பாலமுருகன், வட்டார தலைவர் ஜார்ஜ் நியூட்டன், செயலாளர் லிங்கையா, நிர்வாகிகள் ராமசுப்பு, பாலமுருகன், ஜெயராமன் உள்பட திரளான பால் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story