திருப்பூரில் நிதி நிறுவனத்தில் ரூ.47 லட்சம் கையாடல் செய்த மேலாளர் கைது


திருப்பூரில் நிதி நிறுவனத்தில் ரூ.47 லட்சம் கையாடல் செய்த மேலாளர் கைது
x
தினத்தந்தி 25 Jun 2019 10:15 PM GMT (Updated: 25 Jun 2019 7:33 PM GMT)

திருப்பூரில் நிதி நிறுவனத்தில் ரூ.47 லட்சத்தை கையாடல் செய்த மேலாளரை திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் பி.என்.ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பலர் மாதச்சீட்டுக்கு பணம் செலுத்தி வந்தனர். இந்தநிலையில் சீட்டுப்பணம் முறையாக செலுத்திய சில வாடிக்கையாளர்களுக்கு “தாங்கள் பணம் செலுத்தவில்லை” என நிதி நிறுவனத்தில் இருந்து நோட்டீசு அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்தின் கோவை மண்டல மேலாளர் சக்திவேல் விசாரித்தார்.

அப்போது நிறுவனத்தின் மூத்த மேலாளர் சுரேஷ் கண்ணன் என்பவர் பொதுமக்கள் மாதந்தோறும் செலுத்திய பணத்தை நிறுவனத்தில் செலுத்தாமல் கையாடல் செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து சக்திவேல் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி மற்றும் போலீசார் சுரேஷ் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ரூ.47 லட்சத்தை சுரேஷ் கண்ணன் கையாடல் செய்தது தெரியவந்தது.

அவரை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு டி.சி.ஏ. காலனியை சேர்ந்த சுரேஷ் கண்ணனை(வயது 32) திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். சுரேஷ் கண்ணனின் சொந்த ஊர் தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆகும்.

Next Story