ஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி பொதுமக்கள் பாராட்டு


ஒரு ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நெற்பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி பொதுமக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 26 Jun 2019 4:15 AM IST (Updated: 26 Jun 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

கறம்பக்குடி அருகே ஒரு ஏக்கர் நிலத்தில் நெற்பயிர்களை தனி ஆளாக நடவு செய்து கல்லூரி மாணவி சாதனை படைத்தார். மாணவியின் ஆர்வத்தை விவசாயிகள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள அக்கரை வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் ராஜலெட்சுமி (வயது 19). இவர் தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தாடு அரசு பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சிறுவயதில் இருந்தே விவசாயத்தில் ஆர்வம் உள்ள அவர், அவ்வப்போது பெற்றோருக்கு உதவியாக விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் அவர்களுக்கு சொந்தமான வயலில் ஆழ்குழாய் பாசனம் மூலம் அந்த பயிர்களை நடவு செய்வதற்காக தொழிலாளர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து தனி ஆளாக நடவு பணியை மேற்கொள்வது என முடிவு செய்தார். இதற்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

அதைதொடர்ந்து கடந்த 3 நாட்களில் ஒரு ஏக்கர் நிலத்தில் தானே நெற் பயிர்களை நடவு செய்தார். கல்லூரி மாணவியின் இச்செயலை கண்டு அக்கம் பக்கம் இருந்த விவசாய தொழிலாளர்கள் அவருக்கு உதவ முன்வந்தபோதும், அன்புடன் அதை தவிர்த்தார். மாணவியின் இந்த முயற்சியை அப்பகுதியில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஈடுபாடு கொண்ட இளைஞர்கள் வெகுவாக பாராட்டினர்.

விவசாயம் குறித்தும், விவசாயிகள் படும் இன்னல்கள் குறித்தும், பரவலாக பேசப் படும் இச்சூழலில் விவசாயம் குறித்து ஆர்வமும், விழிப்புணர்வும் ஏற்படும் வகையில், தனி ஆளாக நடவு செய்த கல்லூரி மாணவிக்கு சமூக வலைதளங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Next Story