தத்தெடுத்து வளர்த்த சிறுவன் தவறி விழுந்து சாவு; நண்பர்களுடன் விளையாடிய போது சோகம்


தத்தெடுத்து வளர்த்த சிறுவன் தவறி விழுந்து சாவு; நண்பர்களுடன் விளையாடிய போது சோகம்
x
தினத்தந்தி 25 Jun 2019 10:15 PM GMT (Updated: 25 Jun 2019 9:02 PM GMT)

தத்தெடுத்து வளர்க்கப்பட்ட சிறுவன் நண்பர்களுடன் விளையாடிய போது, தவறி விழுந்து பரிதாபமாக இறந்தான்.

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு மலையடிப்பட்டியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது 45). கோவில் பூசாரி. அவருடைய மனைவி கலா. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் தங்களது வீட்டின் அருகே வசித்த காளீஸ்வரி என்பவரது ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.

காளீஸ்வரிக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிறந்த 2 நாட்களிலேயே குழந்தையை தத்து கொடுத்துவிட்டார். அந்த குழந்தைக்கு காளிராஜ் என பெயர் சூட்டி ஆசை ஆசையாய் வளர்த்து வந்தனர்.

தற்போது காளிராஜூவுக்கு 14 வயது ஆகிறது. 7–ம் வகுப்பு வரை படித்த அவன் கடந்த 2 வருடமாக பள்ளிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் வீட்டின் முன்பு நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் அவன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அவன் தவறி கீழே விழுந்து விட்டதாகவும், இதில் அவனுக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரியவருகிறது.

சுருண்டு விழுந்த அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் சிறுவன் பரிதாபமாக இறந்துபோனான். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் தத்தெடுத்து வளர்த்த மகனை பறிகொடுத்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story