அ.தி.மு.க. தெருமுனை கூட்டம்: 246 கிராமங்களுக்கும் தண்ணீர் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் தளவாய்சுந்தரம் பேச்சு


அ.தி.மு.க. தெருமுனை கூட்டம்: 246 கிராமங்களுக்கும் தண்ணீர் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் தளவாய்சுந்தரம் பேச்சு
x
தினத்தந்தி 25 Jun 2019 10:45 PM GMT (Updated: 2019-06-26T02:40:56+05:30)

246 கிராமங்களுக்கும் தண்ணீர் கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்று மயிலாடியில் நடந்த தெருமுனை கூட்டத்தில் தளவாய்சுந்தரம் பேசினார்.

அஞ்சுகிராமம்,

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 246 கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ.106 கோடி செலவில் அழகியபாண்டியபுரம் கூட்டு குடிநீர் திட்டம் அ.தி.மு.க. அரசு சார்பில் கொண்டு வரப்பட்டது. தற்போது அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

இந்த திட்டத்தை நிறைவேற்ற விடாமல் தி.மு.க.வினர் தடுப்பதாக கூறி மயிலாடியில் தெருமுனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் தம்பிதங்கம், ஏசுதங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் மனோகரன் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் எஸ்.ஏ. அசோகன், சதாசிவம், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன் ஆகியோர் பேசினர்.

தளவாய்சுந்தரம்

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2011-ம் ஆண்டு இந்த கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் தண்ணீர் வழங்குவதற்காக இந்த கூட்டு குடிநீர் திட்டம் ரூ.106 கோடி செலவில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது. அதற்காக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

தண்ணீர் இல்லை என்று தி.மு.க. தலைவர் போராட்டம் நடத்துகிறார். இங்குள்ள கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் அனைத்து கிராம மக்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடைப்பதை தடுக்கிறார். இந்த திட்டம் நிறைவேறும் வரை அதாவது 246 கிராமங்களுக்கும் தண்ணீர் கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் தோவாளை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், அ.தி.மு.க. நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ராஜபாண்டியன், சீனிவாசன், ஜாண் கிறிஸ்டோபர், சுதாகர், மணிகண்டன், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story