குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி நாமக்கல், திருச்செங்கோட்டில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி நாமக்கல், திருச்செங்கோட்டில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Jun 2019 11:00 PM GMT (Updated: 25 Jun 2019 9:39 PM GMT)

நாமக்கல், திருச்செங்கோட்டில் நேற்று குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல்,

தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான காந்திசெல்வன் தலைமை தாங்கி பேசினார். நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த் வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இதில் மாவட்ட அவை தலைவர் உடையவர், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன்னுசாமி, ராமசாமி, சரஸ்வதி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஸ்குமார், ராசிபுரம் நகர செயலாளர் சங்கர், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர்கள் மோகன்தாஸ், நவீன்குமார் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

குடிநீர் பிரச்சினை

ஆர்ப்பாட்ட முடிவில் காந்திசெல்வன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஊராட்சி சபை கூட்டம் நடத்தி, மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்சினை இருக்கிறது. உடனடியாக தலையிட்டு தீர்க்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை அதற்கான முயற்சியை மாவட்ட நிர்வாகமும், அரசும் எடுக்காத காரணத்தால் தற்போது மக்கள் குடிநீருக்காக அலைந்து கொண்டிருக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இனியாவது அரசு குடிநீர் பிரச்சினையை தீர்க்க முன் வரவேண்டும். இதற்கெல்லாம் அரசின் செயல்பாடும் அலட்சிய போக்கும்தான் காரணம். மக்களை பற்றி சிந்திக்காமல் கமிஷன் பெறுவது மட்டுமே நோக்கம் என்கிற அடிப்படையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது இந்த அரசு. தற்போது குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ரூ.500 கோடி ஒதுக்குவதாக கூறுகின்றனர். இதை செலவு செய்வதற்குள் மழை வந்துவிடும். அப்புறம் அந்த பணம் எங்கே போனது என்பது தெரியாது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நேரம் வெகுதூரத்தில் இல்லை. கூடிய விரைவில் ஆட்சி மாற்றம் நிகழப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

திருச்செங்கோடு

இதே போல், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அ.தி.மு.க. அரசை கண்டித்து நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் கட்சியின் திருச்செங்கோடு நகர பொறுப்பாளர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் தங்கவேல், தலைமை கழக பேச்சாளர் முத்து ஆகியோர் தமிழக அரசை கண்டித்து பேசினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய,பேரூர், கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங் களை எழுப்பினர். ஒரு சில தொண்டர்கள் காலிக் குடங்களுடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Next Story