சேலத்தில் இரிடியம் இருப்பதாக கூறி ரூ.55 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது - கும்பல் தலைவனுக்கு வலைவீச்சு
சேலத்தில் இரிடியம் இருப்பதாக கூறி ரூ.55 லட்சம் மோசடி செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கும்பலின் தலைவனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சேலம்,
சேலம் அம்மாபேட்டை என்.ஜி.ஓ. காலனி பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார். தொழில் அதிபர். இவருடைய நண்பர் ஸ்டாலின். இவர் பிரவீன்குமாரிடம் தனக்கு தெரிந்தவரிடம் இரிடியம் இருப்பதாகவும், அதை கோடிக்கணக்கில் விற்பனை செய்யலாம் எனவும் கூறியுள்ளார். நண்பரின் பேச்சை நம்பி அவரும் இரிடியம் வாங்கலாம் என தெரிவித்தார். இதையொட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கும்பல் பிரவீன்குமாரை தொடர்பு கொண்டு தங்களிடம் இரிடியம் இருப்பதாகவும், அதனை ரூ.300 கோடிக்கு மேல் விற்பனை செய்யலாம் எனவும் ஆசைவார்த்தை கூறியுள்ளது. அதன்பேரில் பிரவீன்குமார் முதல் தவணையாக ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார்.
பின்னர் அவரிடம் அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் கண்ணாடி பேழையில் இருந்த பார்சலை கொடுத்தார். இதில், இரிடியம் இருப்பதாகவும், அதேசமயம் வெட்ட வெளியில் அதை திறக்க முடியாது எனவும், அமெரிக்காவில் கிடைக்கும் பிரத்யேக நவீன பாதுகாப்பு உடை அணிய வேண்டும் எனவும், இதற்காக ரூ.1 கோடியே 30 லட்சம் வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார். இதற்காக பிரவீன் குமார் அந்த நபரிடம் ரூ.30 லட்சம் கொடுத்து மீதமுள்ள பணத்தை பின்னர் தருவதாக கூறியுள்ளார்.
ஆனால் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கூறியவாறு பார்சலை சோதனை செய்ய வரவில்லை. மேலும் ரூ.1 கோடி கொடுத்தால் வந்து சோதனை செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த பிரவீன்குமார் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம் புகார் தெரிவித்தார். அவரது உத்தரவின் பேரில் அந்த பார்சலை சோதனை செய்ய வெடிகுண்டு நிபுணர்கள் முடிவு செய்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கமிஷனர் அலுவலகம் பின்புறம் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் பார்சலை கொண்டு வந்து சோதனை செய்தனர். ஆனால் அதில் கண்ணாடி துகள்கள் மற்றும் வேதிபொருட்கள் மட்டுமே இருந்தன. இதையடுத்து அந்த பார்சலை போலீசார் எடுத்து சென்றனர்.
இரிடியம் இருப்பதாக கூறி ரூ.55 லட்சம் தன்னிடம் மோசடி செய்தது குறித்து பிரவீன்குமார் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் ஆந்திரா, சென்னை, சேலம், கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 6 பேர் கொண்ட கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்த அங்கம் தாதாஜி (வயது 39), சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சரவணன் (45), சென்னை ராயபுரம் தம்பி லைன் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (29), சென்னை நெற்குன்றம் பல்லவன் நகர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த சிவக்குமார் (42) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தலைமறைவாகி உள்ள கும்பல் தலைவன் கிருஷ்ணகிரியை சேர்ந்த மதன் உள்பட 2 பேரை பிடிக்க, இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் தனிப்படை அமைத்து மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். இந்த தனிப்படையினர் தலைமறைவாக இருப்பவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த மோசடி கும்பல் தமிழகம் முழுவதும் நெட்வொர்க் அமைத்து தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story