கோவில் இட ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


கோவில் இட ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2019 11:00 PM GMT (Updated: 26 Jun 2019 7:39 PM GMT)

ஆலங்குடி அருகே கோவில் இட ஆக்கிரமிப்பை அகற்ற கோரி பொதுமக்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

ஆலங்குடி,

ஆலங்குடி அருகே கும்மங்குளத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த மக்கள் சுமார் 50 ஆண்டுகளாக வழிபட்டு வருகின்றனர். இந்த கோவில் முன்பு கேவிகோட்டையை சேர்ந்த மதி என்பவருக்கு ஒரு பிரிவினர் முடி திருத்தம் செய்யும் கடையை அமைத்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில் ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த கொத்தனார் தொழில் செய்து வரும் கருப்பையா மகன் விக்னேஸ்வரன் மற்றும் ராமன் மகன் ராஜா, தர்மலிங்கம் மகள் மங்காயி, கணபதி மனைவி விஜயா, கணபதி மகன் கவித்திரன், நல்லதம்பி மனைவி லட்சுமி, மனோஜ் ஆகியோர் கோவில் தேரோடும் வீதியில் கடை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதை அறிந்த அதே ஊரை சேர்ந்த ஆரோக்கியம் மகன் சேவியர், ஜோசப் மகன் முத்துக்கண்ணு, ஆரோக்கியம் மகன் அருளாற்று, ராயர் மகன் சந்தானம், சில்வர் ஸ்டார் மகன் செல்வம் ஆகியோர் எங்கள் ஊரில் கடை வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு நீங்கள் யார் என்று கேட்டு சாதி பெயரை சொல்லி கட்டையால் விக்னேஸ்வரன் உள்பட 7 பேரையும் தாக்கினர். இதில் 7 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து படுகாயமடைந்த 7 பேரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் மங்காயி, விஜயா ஆகியோர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேல் சிகிச்சைக்காக விக்னேஸ்வரன், ராஜா, கவித்திரன், லட்சுமி, மனோஜ் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சாதி பெயரை சொல்லி தாக்கியும், கோவில் இடத்தை ஆக்கிரமித்து முடி திருத்தம் செய்யும் கடை அமைத்தவர்கள் மீதும் நட வடிக்கை எடுக்க கோரி ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கும்மங்குளம் ஆதிதிராவிடர் மக்கள் ஆலங்குடி-வடகாடு முக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், தாசில்தார் கருப்பையா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர் களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதையடுத்து கோவில் இட ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்து ஆலங்குடி தாசில்தார் அலு வலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி தலைமையிலான அதிகாரிகள் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்ற கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story