ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டம் மணியரசன் பேட்டி


ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் காத்திருப்பு போராட்டம் மணியரசன் பேட்டி
x
தினத்தந்தி 26 Jun 2019 10:45 PM GMT (Updated: 26 Jun 2019 7:45 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் ஜூலை 2-ந்தேதி காத்திருப்பு போராட்டம் நடை பெறும் என்று தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் கூறினார்.

புதுக்கோட்டை,

தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த தமிழ் தேசிய பேரியக்கம் போராடி வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே கல்லாக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் மதுபான ஆலையை மூட வலியுறுத்தி நாளை (வெள்ளிக்கிழமை) கந்தர்வகோட்டையில் கையெழுத்து பிரசாரம் நடைபெற உள்ளது.

காத்திருப்பு போராட்டம்

காவிரி டெல்டா மாவட்டங்களில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராடி வரும் சூழ்நிலையில், மக்கள் உணர்வுக்கு மதிப்பு அளிக்காமல் மேலும் 104 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அனுமதி கோரி இருப்பது வேதனைக்குரியது. இது மக்களை ஒடுக்கும் செயல், தற்போது நடந்து வரும் போராட்டங்கள் மேலும் தீவிர படுத்தப்படும். ஜூலை 2-ந்தேதி திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.

முறையாக ஆணையத்தை உருவாக்க வேண்டும்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களால் பாதிப்பு ஏற்படும் என்று கூறி அந்த திட்டத்திற்கு தடை விதித்தார். தற்போது ஜெயலலிதா ஆட்சியை நடத்தி வருகிறோம் என்று கூறி வரும் தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவருக்கு துரோகம் விளைவிக்கும் விதமாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரித்து வருகிறார். காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். இந்த ஆணையம் மோடியின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் போலியான ஆணையம். இந்த ஆணையத்தை கலைத்துவிட்டு முறையாக செயல்படக்கூடிய ஆணையத்தை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story