படிப்பை பாதியில் நிறுத்திய மலைக்கிராம மாணவி மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார்; விடுதியில் தங்கி படிக்க தமிழக அரசு ஏற்பாடு


படிப்பை பாதியில் நிறுத்திய மலைக்கிராம மாணவி மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார்; விடுதியில் தங்கி படிக்க தமிழக அரசு ஏற்பாடு
x
தினத்தந்தி 27 Jun 2019 4:15 AM IST (Updated: 27 Jun 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

படிப்பை பாதியில் நிறுத்திய மலைக்கிராம மாணவி மீண்டும் கல்லூரியில் சேர்ந்தார். அவர் விடுதியில் தங்கி படிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள திம்பம் மலைப்பகுதியில் காளிதிம்பம் கிராமம் அமைந்துள்ளது. 60–க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பழங்குடியின மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இக்கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி சாமிநாதன். இவருடைய மனைவி மாரம்மாள். இவர்களுடைய மகள் சிவரஞ்சனி, மகன் ஹரிபிரசாந்த்.

மாரம்மாள் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால் சாமிநாதன் தனது மகள் சிவரஞ்சனி, மகன் ஹரிபிரசாந்த் இருவரையும் கூலி வேலை செய்து படிக்க வைத்தார். சிவரஞ்சனி சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 முடித்துவிட்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் கோவை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பட்ட படிப்பில் சேர்ந்தார்.

இந்த நிலையில் சாமிநாதனுக்கு கடந்த ஆண்டு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சிவரஞ்சனி படிப்பை பாதியில் விட்டுவிட்டு தனது தந்தையை கவனிப்பதற்காக வந்துவிட்டார். இதற்கிடையே எதிர்பாராதவிதமாக சாமிநாதன் இறந்துவிட்டார். இதனால் சிவரஞ்சனியும், ஹரிபிரசாந்த்தும் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.

அதன்பின்னர் சிவரஞ்சனி 100 நாள் வேலைத்திட்டத்தில் சேர்ந்து தனது சகோதரனை படிக்க வைத்தார். இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து சிவரஞ்சனி, ஹரிபிரசாந்த் இருவரின் படிப்பு செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த நிலையில் மீண்டும் விதி விளையாடியது. சிவரஞ்சனியின் சகோதரன் ஹரிபிரசாந்த்தும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

குடும்பத்தார் அனைவரையும் இழந்து சோகத்தில் இருந்த சிவரஞ்சனி கல்லூரி படிப்பை மீண்டும் தொடர தமிழக அரசு உதவி செய்தது.

கோவை அரசு கலைக்கல்லூரியில் அவர் சேர்ந்து படிப்பதற்கும், அங்கு விடுதியில் தங்கி கொள்வதற்கும், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி தற்போது சிவரஞ்சனி கோவையில் உள்ள அரசு விடுதியில் தங்கி அங்குள்ள அரசுக்கல்லூரியில் சேர்ந்து மீண்டும் படித்து வருகிறார்.


Next Story