நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டம்


நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 26 Jun 2019 11:00 PM GMT (Updated: 26 Jun 2019 8:26 PM GMT)

நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

வேளாண்துறை செயலாளருடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முழு சம்பளம், நிலுவை சம்பளத்தை வழங்கவேண்டும், தினக்கூலி ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும், பாசிக் நிறுவனம் லாபகரமாக நடத்தக்கூடிய தொழில்களை தொடர்ந்து நடத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும், வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தியை வேறு துறைக்கு மாற்றவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்கத்தினர் (ஏ.ஐ.டி.யு.சி.) வலியுறுத்தி வருகின்றனர்.

அவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பாசிக் தலைமை அலுவலகம் முன்பு தொடர் தர்ணா போராட்டத்தை நேற்று தொடங்கினார்கள். இந்த தர்ணாவுக்கு பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.

சங்க செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.யு.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தர்ணாவை தொடங்கிவைத்தார். ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயல் தலைவர் அபிசேகம், தலைவர் தினேஷ் பொன்னையா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

தர்ணா போராட்டத்தில் சங்க துணை செயலாளர்கள் மகேந்திரன், கோவிந்தராசு, மூர்த்தி, துணைத்தலைவர் மணிக்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story