மணல் குவாரியை மூடக்கோரி பெண்கள் தர்ணா போராட்டம்


மணல் குவாரியை மூடக்கோரி பெண்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 27 Jun 2019 4:15 AM IST (Updated: 27 Jun 2019 3:28 AM IST)
t-max-icont-min-icon

காரியாபட்டி அருகே கிழவனேரி கிராமத்தில் மணல் குவாரியை மூடக்கோரி தாலுகா அலுவலகத்தில் மகளிர் குழுவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.

காரியாபட்டி,

காரியாபட்டி அருகே கிழவனேரி கிராமத்தில் செம்மண் குவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மணல் எடுக்கப்படுகிறது. மணல் எடுத்து வருவதால் இந்த கிராமத்தில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் அனுமதி அளித்த அளவைவிட ஆழமான அளவில் மணல் எடுத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

நீராதாரம் பாதிக்கும் என்று பலமுறை காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் திரண்டு வந்து காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் காரியாபட்டி தாசில்தார் ராம்சுந்தர், காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தாரிடம் மகளிர் சுய உதவிக் குழுவினர், கிழவனேரி கிராமத்தில் செயல்பட்டு வரும் மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும், இல்லையென்றால் தொடர் போராட்டங்களை கையில் எடுப்போம் என்று கூறினர். பின்னர் காரியாபட்டி தாசில்தார், கிழவனேரி கிராமத்திலுள்ள மணல் குவாரியை நிரந்தரமாக மூட பரிந்துரை செய்யப்படும் என்று உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர்.


Next Story