ஐ.பி.எஸ். அதிகாரி என்று கூறி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஏமாற்றிய வாலிபர் கைது


ஐ.பி.எஸ். அதிகாரி என்று கூறி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஏமாற்றிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 26 Jun 2019 10:54 PM GMT (Updated: 26 Jun 2019 10:54 PM GMT)

ஐ.பி.எஸ். அதிகாரி என்று கூறி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஏமாற்றியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

தமிழக பொது வினியோகத்துறை மேலாண் இயக்குனரகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பவர் மதுமிதா. இவரது ‘வாட்ஸ் அப்’ எண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில், தான் பெங்களூருவில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றி வருவதாகவும், தனது பெயர் பிரதாப் என்றும் கூறி வந்துள்ளார். மேலும் தனது ரே‌ஷன் கார்டு சம்பந்தமான புகாரை சரி செய்து தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் மீண்டும் மதுமிதாவிற்கு ‘வாட்ஸ் அப்’பில் ரே‌ஷன் கார்டு தொடர்பான புகாரில் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று மிரட்டும் வகையில் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உத்தரவிட்டார்.

இதையடுத்து செல்போன் எண் மூலம் முகவரியை கண்டுபிடித்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது குறுஞ்செய்தி அனுப்பியவர், சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம், எஸ்.பி.ஐ. காலனியை சேர்ந்த பிரதீப் (வயது 30) என்பதும், ஐ.பி.எஸ். அதிகாரி என்று பொய் சொல்லி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரை விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், பட்டப்படிப்பு படித்துள்ள பிரதீப் ஆன்–லைனில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் செல்போன் எண்களை தெரிந்துகொண்டு, அவர்களிடம் தான் ஐ.பி.எஸ். அதிகாரி என்று கூறி காரியங்களை சாதித்து வந்தது தெரியவந்தது. இதுபோல 4–க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அவர் ஏமாற்றியதும் விசாரணையில் தெரிந்தது. இதனையடுத்து பிரதீப்பை போலீசார் கைது செய்தனர்.


Next Story