புழல் சிறைக்குள் ரவுடியை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை; திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு
புழல் சிறைக்குள் ரவுடியை கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.
திருவள்ளூர்,
சென்னை திருவொற்றியூரை சேர்ந்தவர் குமார் என்கிற வெல்டிங் குமார் (வயது 45). பிரபல ரவுடியான இவர் மீது பல போலீஸ் நிலையங்களில் 20–க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அரசியல்வாதிகளின் கூலிப்படை தலைவராகவும் திகழ்ந்துள்ளார்.
கடந்த 1985–ம் ஆண்டு திருவொற்றியூரில் ராதாகிருஷ்ணன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதேபோல் கடந்த 1999–ம் ஆண்டு ஏழுகிணறில் மற்றொருவரை கொலை செய்த வழக்கில் மற்றொரு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
ஜெயலலிதாவிற்கு எதிராக டான்சி வழக்கை தொடர்ந்த வக்கீல் சண்முகசுந்தரம் தாக்கப்பட்ட வழக்கிலும், வக்கீல் விஜயன் தாக்கப்பட்ட வழக்கிலும் வெல்டிங் குமாருக்கு தொடர்பு உண்டு. இந்த வழக்குகளில் சி.பி.ஐ. இவரை கைது செய்து தண்டனை பெற்று தந்தது.
இந்த நிலையில் கடந்த 10.6.2009 அன்று சென்னை புழல் சிறையில் வெல்டிங் குமார் இருந்தார். அதே சிறையில் எண்ணூர் 6–வது தெருவை சேர்ந்த கார்மேகம் (35), மணலி பூங்காவனம் தெருவை சேர்ந்த அன்பு (34) மற்றும் ராஜா (26) ஆகிய 3 பேரும் இருந்தனர். இவர்களும் ரவுடிகள் தான்.
ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்த வழக்கில் பழிக்குப்பழி வாங்குவதற்காக வெல்டிங் குமாரை தீர்த்து கட்ட முடிவு செய்து ரவுடி வெல்டிங் குமாரிடம் 3 பேரும் தகராறில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக கைதிகள் பழனி, கார்த்திக், சுந்தரம், கதிர் என்கிற கதிர்வேல், ரமேஷ் ஆகியோர் இருந்துள்ளனர். அப்போது கார்மேகம், அன்பு, ராஜா ஆகிய 3 பேரும் வெல்டிங் குமாரை அங்கிருந்த சாப்பாட்டு தட்டை மடக்கி குத்தி கொலை செய்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மேற்கண்ட 8 பேரையும் கைது செய்தனர். இதில் ராஜா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துபோனார்.
வெல்டிங் குமார் கொலை வழக்கு திருவள்ளூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. உரிய விசாரணைகள் செய்யப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அரசு தரப்பு வக்கீலாக வி.ஆர்.ராம்குமார் வாதாடினார்.
வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செல்வநாதன், குற்றவாளிகள் கார்மேகம், அன்பு ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
மீதமுள்ள 5 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து கார்மேகம், அன்புவை பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டு சென்றனர்.