நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் செயல்படும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியை இடமாற்றம் செய்ய கூடாது கலெக்டர் அலுவலகத்தில் மனு


நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் செயல்படும் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியை இடமாற்றம் செய்ய கூடாது கலெக்டர் அலுவலகத்தில் மனு
x
தினத்தந்தி 28 Jun 2019 4:30 AM IST (Updated: 27 Jun 2019 10:36 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர் நல ஆஸ்பத்திரியை(இ.எஸ்.ஐ.) இடமாற்றம் செய்ய கூடாது என்று கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மாணிக்கவாசகம், முத்தையாபிள்ளை உள்பட பலர் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில், “நாகர்கோவில் வடிவீஸ்வரம் தளவாய்தெருவில் தொழிலாளர் நல ஆஸ்பத்திரி (இ.எஸ்.ஐ.) மருந்தகத்துடன் செயல்பட்டு வருகிறது. அண்ணா பஸ் நிலையத்தின் மிக அருகில் இந்த ஆஸ்பத்திரி செயல்படுவதால் நோயாளிகள் வந்து செல்ல எளிதாக இருக்கிறது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டால் காப்பீட்டாளர்கள் விடுப்பு சான்றிதழ் சமர்ப்பிக்கவும், தகுதி சான்றிதழ் பெறவும் அலைக்கழிக்கப்படுவார்கள். எனவே காப்பீட்டாளர்கள் நலன் கருதி தொழிலாளர் நல ஆஸ்பத்திரியை இடமாற்றம் செய்ய கூடாது” என்று கூறப்பட்டு உள்ளது.

இதே போல் ஆசாரிபள்ளம் வசந்தம்நகரை சேர்ந்த ஏராளமான மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், எங்கள் ஊரின் மெயின் ரோட்டின் ஓரத்தில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் மதுப்பிரியர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ரோட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சென்று வர சிரமப்படுகிறார்கள். இந்த நிலையில் அந்த மதுக்கடையை ஊருக்குள் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இதை தடுக்க வேண்டும். மேலும் தற்போது செயல்பட்டு வரும் மதுக்கடையை அகற்ற வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.

Next Story