தூத்துக்குடி மாவட்டத்தில், வாரந்தோறும் ஒரு கிராமத்தில் குளத்தை தூர்வார நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


தூத்துக்குடி மாவட்டத்தில், வாரந்தோறும் ஒரு கிராமத்தில் குளத்தை தூர்வார நடவடிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 27 Jun 2019 10:15 PM GMT (Updated: 27 Jun 2019 6:48 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒவ்வொரு வாரமும் ஒரு கிராமத்தில் குளத்தை தூர்வார திட்டமிடப்பட்டு உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர்கள் சிம்ரான்ஜித்சிங் கலோன், தனப்பிரியா, விஜயா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் மகாதேவன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் புதுக்கோட்டை அருகே உள்ள கீழபூவானி பகுதி விவசாயிகள் கலெக்டரை முற்றுகையிட்டு கோரிக்கை விடுத்தனர். அப்போது, கீழபூவானி பகுதியில் தனியார் காற்றாலை நிறுவனம் ஓடைகளை ஆக்கிரமித்தும், பட்டா நிலங்களில் அனுமதியின்றியும் மின்கம்பங்களை நட்டு உள்ளனர். இந்த மின்கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையென்றால் அதனை அகற்றுவதற்கு எங்களுக்கு அனுமதி தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதே போன்று மாவட்டத்தில் உரம் விலையை குறைக்க வேண்டும். உரம் விற்பனை நிலையங்களில் விலைப்பட்டியல், இருப்பு பட்டியல் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி விவசாயிகள் மாதிரி உர மூடைகளை சுமந்தபடி நூதன போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி அருகே உள்ள குலையன்கரில் பகுதி விவசாயிகள், குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு ஏராளமானவர்கள் வந்தனர். அவர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் மூலம் நாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு எரிவாயு குழாய் பதிக்க திட்டமிட்டு உள்ளனர். இந்த பகுதியில் ஸ்ரீவைகுண்டம் வடகால் பாசனத்துக்கு உட்பட்ட பெட்டைக்குளம், கோரம்பள்ளம் குளம் ஆகியவற்றின் மூலம் பாசனவசதி பெறுகிறது. விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதித்தால் குலையன்கரிசல் கிராமத்தில் விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும். ஆகையால் குலையன்கரிசல் நஞ்சை விவசாய நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்காமல் மாற்றுப்பாதையில் பதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதன்பிறகு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர். அப்போது, தாமிரபரணி ஆற்றில் அமலைச் செடிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சடையநேரி கால்வாய் நடுவில் நங்கை மொழி பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். புத்தன்தருவை குளத்தை தூர்வார வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் மக்காச்சோளம் உள்ளிட்ட பயறுகளின் விதைகளை விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் விரும்பும் விதைகள் இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.

தொடர்ந்து விவசாயிகளுக்கு பதில் அளித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் மாதம் சராசரியாக 179 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். தற்போது 33.67 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்து உள்ளது. அதே நேரத்தில் அணைகளில் உள்ள தண்ணீர் குடிநீருக்காக மட்டுமே இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து மழை பெய்து கூடுதல் தண்ணீர் வந்தால் விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். மத்திய அரசின் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன்படி சிறு, குறு விவசாயிகள் மட்டுமின்றி விதிமுறைக்கு உட்பட்டு அனைத்து விவசாயிகளும் பலன்பெறலாம். இந்த திட்டத்தில் இதுவரை 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விவசாய நிலங்களை பட்டா மாற்றம் செய்வதற்காக 4 ஆயிரம் பேர் வரை விண்ணப்பித்து உள்ளனர்.

பயிர் காப்பீட்டை பொறுத்தவரை 2015-17-ம் ஆண்டு காப்பீடு செய்த 71 விவசாயிகளுக்கு ரூ.24 லட்சம் சமீபத்தில் வழங்கப்பட்டு உள்ளது. இது தவிர 78 விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் காப்பீடு தொகை வந்து உள்ளது. அந்த விவசாயிகளின் விவரங்கள் சரிவர இல்லாததால் அடையாளம் கண்டறிய முடியாத நிலை உள்ளது. இதனால் சிறப்பு முகாம் நடத்தி விவசாயிகளை கண்டறிந்து காப்பீடு தொகை வழங்கப்படும். 2017-18-ம் ஆண்டுக்கான காப்பீடு தொகை ரூ.50 கோடி வர வேண்டும். இதில் ரூ.29 கோடியே 10 லட்சம் வந்து உள்ளது. மீதம் உள்ள தொகை விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசின் ஜனசக்தி அபியான் என்னும் திட்டம் ஜூலை மாதம் 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சில வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அந்த வட்டாரங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான திட்டங்கள், மழைநீர் சேகரிப்பு திட்டங்கள், கழிவுநீரை சுத்திகரித்து விவசாயத்துக்கு பயன்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதே போன்று வாரம் தோறும் ஒரு கிராமத்தில் உள்ள குளத்தை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தூர்வாரும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு ஊரை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 50 பேர் கையெழுத்திட்டு தங்கள் பகுதியில் உள்ள குளத்தை தூர்வார கோரி மனு கொடுக்க வேண்டும். அவ்வாறு மனு கொடுக்கும் போது, அந்த கிராமத்தில் அரசு செலவில் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் ஒரே நாளில் குளம் தூர்வாரப்படும். அந்த பகுதியில் சுத்தம் செய்து மரங்கள் நடுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story