விளாத்திகுளம் அருகே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை காதல் மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் விபரீத முடிவு


விளாத்திகுளம் அருகே  போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை  காதல் மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 28 Jun 2019 4:45 AM IST (Updated: 28 Jun 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விளாத்திகுளம்,

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் இருதயராஜ். இவருடைய மகன் கவுரி சங்கர் (வயது 32). இவர் தூத்துக்குடி அருகே தருவைக்குளம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ஜெனிபா. இவர் தூத்துக்குடி ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மகிழினி (4) என்ற மகளும், மாறன் (1) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு போலீசில் ஒன்றாக சேர்ந்த கவுரி சங்கரும், ஜெனிபாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் சங்கரலிங்கபுரத்தில் புதிய வீடு கட்டினர். கவுரி சங்கர் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தருவைக்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் கவுரி சங்கரின் தந்தை இருதயராஜ், கடந்த மாதம் இறந்து விட்டார். அப்போது அவரது உடலை புதிய வீட்டுக்குள் கொண்டு வர ஜெனிபா எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் கவுரி சங்கர் தனது தந்தையின் உடலை தனது வீட்டில் வைத்து, இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

தந்தை இறந்ததால் கவுரி சங்கர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மருத்துவ விடுப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் இருதயராஜின் உடலை வீட்டுக்குள் கொண்டு வந்ததால், அங்குள்ள டைல்ஸ் கற்களை எடுத்து விட்டு, புதிய டைல்ஸ் கற்களை பதிக்க வேண்டும் என்று ஜெனிபா கூறியதாக தெரிகிறது. இதனால் கவுரி சங்கர் மனமுடைந்த நிலையில் இருந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் ஜெனிபா தன்னுடைய மகளை பள்ளிக்கூடத்துக்கு அழைத்து சென்றார். அப்போது வீட்டில் தனியாக இருந்த கவுரி சங்கர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிதுநேரத்தில் வீட்டுக்கு திரும்பி வந்த ஜெனிபா தன்னுடைய கணவர் தூக்கில் பிணமாக தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சங்கரலிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த போலீஸ்காரர் கவுரி சங்கரின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளாத்திகுளம் அருகே மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story