மதுரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து துணிகரம், தொழில் அதிபர் குடும்பத்தினரை கட்டிப்போட்டு ரூ.38 லட்சம், 50 பவுன் கொள்ளை
மதுரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து தொழில் அதிபரின் குடும்பத்தினரை கட்டிப்போட்டு ரூ.38 லட்சத்தையும், 50 பவுன் நகையையும் கொள்ளையடித்துச் சென்ற 2 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மதுரை,
மதுரை மேல அனுப்பானடி சின்னகண்மாய் அரவிந்த் நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 67). இவர் ஒரு பள்ளிக்கூட நிர்வாக கமிட்டி உறுப்பினராகவும், மாட்டுத்தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளராகவும் உள்ளார். அவருடைய மனைவி கிரகலட்சுமி.
இவர்களுடைய மகன் வைசாக் பிரபு. அவருக்கும் திருமணமாகி சதிகா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
நேற்று மதியம் வெற்றிவேல், அவருடைய மனைவி மற்றும் மருமகள் மட்டும் வீட்டில் இருந்தனர். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அதில் ஒருவர் ஹெல்மெட் அணிந்தவாறு வீட்டின் முன்பு நின்று, ‘ஹாலிங்பெல்’லை அடித்தார். அப்போது, கிரகலட்சுமி சென்று கதவை திறக்காமலேயே அவர்களிடம் விசாரித்தார். தாங்கள் கூரியர் நிறுவனத்தில் இருந்து வந்திருப்பதாக கூறியுள்ளனர்.
அதை தொடர்ந்து கிரகலட்சுமி கதவை திறந்ததும், 2 பேரில் ஒருவர் திடீரென்று தான் வைத்திருந்த மிளகாய்பொடியை எடுத்து அவர் மீது வீசினார். மேலும் அவரை வீட்டுக்குள் தள்ளி, சத்தம் போடாமல் இருக்க பிளாஸ்டிக் டேப்பால் அவரது வாய் மற்றும் கைகளை கட்டினார். இதற்கிடையே வெற்றிவேலும், அவருடைய மருமகளும் அங்கு வந்த போது, அவர்கள் மீதும் மிளகாய் பொடியை தூவினார்கள். பின்பு அவர்களையும் பிளாஸ்டிக் டேப்பால் வாய், கை, கால்களை கட்டியுள்ளனர்.
பின்னர் அவர்கள் கிரகலட்சுமி அணிந்திருந்த 22 பவுன் நகை, மருமகள் சதிகா அணிந்திருந்த 16 பவுன், வெற்றிவேலிடம் இருந்து 12 பவுன் என நகைகளை பறித்துக் கொண்டனர். மேலும் மாடியில் உள்ள அறைக்கு சென்று பார்த்தனர். அங்கு ஒரு பையில் ரூ.38 லட்சம் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பணப்பையையும் தூக்கிக்கொண்டு வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவிவிட்டு, அந்த 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.
இதற்கிடையே வெற்றிவேலின் பேரக்குழந்தைகளை பள்ளிக்கூடம் முடிந்து, அவர்களது டிரைவர் வீட்டுக்கு அழைத்து வந்தார். அப்போது கை, கால் கட்டிய நிலையில், வாய் பிளாஸ்டிக் டேப்பால் ஒட்டப்பட்ட நிலையில் வெற்றிவேல் உள்பட 3 பேரும் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர்களை காப்பாற்றினார். நடந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு தெப்பக்குளம் போலீசார் விரைந்து வந்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
மோப்பநாய் அந்த வீட்டின் முன்பகுதியில் மோப்பம் பிடித்துவிட்டு, மோட்டார் சைக்கிள் சென்ற பாதையில் சற்று தூரம் ஓடிவிட்டு திரும்ப வந்தது. தடயவியல் நிபுணர்கள் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்தனர்.
வீட்டில் இருந்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, அது பழுதாகி இருந்தது. எனவே அந்த பகுதியில் பொருத்தியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
கொள்ளையர்கள் தப்பிச்சென்ற மோட்டார் சைக்கிளில் முன்பும், பின்பும் நம்பர் பிளேட் இல்லாமல் இருந்ததும், கொள்ளையர்கள் இருவரும் சுமார் 30 வயதுடையவர்கள் என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், தொழில் அதிபர் வீட்டில் பணம் வைத்திருக்கும் இடத்தை நன்கு அறிந்தவர்கள்தான் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story