கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் மரணம்


கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் மரணம்
x
தினத்தந்தி 28 Jun 2019 4:00 AM IST (Updated: 28 Jun 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் மரணம்.

கருங்கல்,

குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. குமாரதாஸ் (வயது 68). இவர் குமரி மாவட்டம் கருங்கல் அருகே காட்டுக்கடை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருடைய மனைவி விமலா. இவர்களுக்கு 4 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.

குமாரதாஸ் சென்னையில் உள்ள மகளை பார்ப்பதற்காக குடும்பத்துடன் காரில் புறப்பட்டார். நேற்று மாலை திண்டிவனம் பகுதியில் சென்ற போது குமாரதாசுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்த டாக்டர், குமாரதாஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.மாரடைப்பால் மரணம் அடைந்த குமாரதாஸ், 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். 84-ம் ஆண்டு ஜனதா கட்சி, 91-ம் ஆண்டு ஜனதா தளம், 96-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ், 2001-ம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கிள்ளியூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் பாரம்பரிய சித்த வைத்திய குடும்பத்தை சேர்ந்தவர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் மாநில துணை தலைவர் பொறுப்பில் இருந்து வந்தார். ஜி.கே.வாசனின் நெருங்கிய ஆதரவாளராக செயல்பட்டவர். குமாரதாஸ் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் வளர்ச்சிக்காக அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். அனைவரிடத்திலும் அன்பாக பழகிடும் பண்பாளர். இவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அண்ணன் குமாரதாஸ் மறைவு எனக்கு தனிப்பட்ட முறையிலும், குமரி மாவட்ட மக்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும், குமரியில் வர்த்தக துறைமுகம் கொண்டு வந்தே தீர வேண்டும் என்ற அவரது லட்சியத்தை மனதில் தாங்கி அதை செயல்படுத்தும் வகையில் பணி செய்வதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

Next Story