ஈரோட்டில் பட்டப்பகலில் வங்கி அதிகாரி வீட்டில் 20½ பவுன் நகை கொள்ளை
ஈரோட்டில் பட்டப்பகலில் வங்கி அதிகாரி வீட்டில் 20½ பவுன் நகையை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு கொல்லம்பாளையம் ஜீவானந்தம் வீதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 4–வது தளத்தில் வசித்து வருபவர் நவீன் (வயது 27). இவர் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கியில் துணை மேலாளராக பணியாற்றி வருகிறார்.
நவீன் தனது தாய் தேன்மொழி, தந்தை நாகராஜ், மனைவி சங்கவி ஆகியோருடன் வசித்து வருகிறார். நவீனின் தந்தை திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று நவீனும் அவரது தந்தையும் பணிக்கு சென்று விட்டனர். தேன்மொழியும், சங்கவியும் காலை 11 மணி அளிவில் வீட்டை பூட்டி விட்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள நாகாத்தமன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுவிட்டனர்.
பின்னர் அங்கு சாமி தரிசனத்தை முடித்துவிட்டு 2 பேரும் மதியம் ஒரு மணிக்கு வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 20½ பவுன் நகையை காணவில்லை. அதை யாரோ மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து அவர்கள் இதுபற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.