நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் வலியுறுத்தல்


நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில்,  விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Jun 2019 4:00 AM IST (Updated: 28 Jun 2019 10:30 PM IST)
t-max-icont-min-icon

நெல்லையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என நெல்லையில் நேற்று நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

நெல்லை,

நெல்லை மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வளர்ச்சிமன்ற கூட்டரங்கத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். வேளாண்மைத்துறை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:- தமிழ்நாடு விவசாயிகள் சங்க நெல்லை மாவட்ட செயலாளர் பெரும்படையார் பேசுகையில், “நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் 11 அணைகள் அமைந்துள்ளன. தென் மேற்கு பருவமழையும், வடகிழக்கு பருவ மழையும் இந்த ஆண்டுகளில் குறைந்த அளவே பெய்துள்ளது. இதனால் பெரும்பாலான அணைகள் வறண் டன. குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டன. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்“ என்றார்.

அகில இந்திய விவசாயிகள் மகா சபை செயலாளர் சேக் மைதீன் பேசுகையில், “நெல்லை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்“ என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய முத்துராமலிங்கம், “உங்கள் கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள். அரசுக்கு அனுப்பி வைப்போம்“ என்றார்.

விவசாயிகள் பேசுகையில், “3 ஆண்டுகளுக்கு முன்புள்ள காப்பீட்டு தொகை இதுவரை வழங்கப்படவில்லை. சேதமடைந்த வாழை, நெற்பயிர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை“ என்றனர்.

அதற்கு காப்பீட்டு நிறுவன அதிகாரி பேசுகையில், “2016-2017-ம் ஆண்டுக்கு காப்பீட்டு தொகை ரூ.99 கோடி வரை வழங்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு சரியாக இல்லாத விவசாயிகளின் பட்டியல் கணக்கெடுக்கப்பட்டு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது“ என்றார். இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. பின்னர் அதிகாரிகள், விடுபட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றனர்.

விவசாயிகள், “தென்காசி அருகே உள்ள குறிச்சி பகுதியில் வெங்காயம் பயிரிட்டு வருகிறோம். வறட்சி காரணமாக வெங்காயத்தில் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது“ என்றனர். அதிகாரிகள், அரசு சார்பில் கணக்கெடுக்கப்பட்டு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றனர்.

விவசாயிகள், “செங்கோட்டை அருகே உள்ள புளியரை பகுதியில் திருத்துக்குளம், நடு திருத்துக்குளம், ஆரியமார்தாண்டபேரி குளம் ஆகிய 3 குளங்கள் விவசாயத்துக்காக பயன்படுத்தப்பட்டன. அந்த குளங்கள் ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனைகளாக ஆக்கி விட்டனர். அந்த குளங்களை ஆக்கிரமிப்பு செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் அனுமதி கொடுத்தார்களா? என்று தெரியவில்லை. காணாமல் போன குளத்தை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்“ என்றனர். இதற்கு அதிகாரிகள், முறையாக விசாரணை நடத்துவோம்“ என்றனர்.

விவசாயிகள், “வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும், அந்த பொருட்கள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விவசாய நியாய விலைக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னை, கோவை, நீலகிரி, திருப்பூர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் நியாய விலைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 45 நியாய விலைக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் நெல்லை மாவட்டத்திலும் விவசாய நியாய விலை கடைகள் திறக்க வேண்டும்“ என்றனர்.

அதிகாரிகள், “இதுகுறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்“ என்றனர்.

விவசாயிகள், “குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்காவில் சுகாதார வளாகம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை“ என்றனர்.

இதற்கு பதில் அளித்த தோட்டக்கலைத்துறை அதிகாரி, அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த பூங்காவை பாருங்கள். தெரியாமல் கருத்து தெரிவிக்க கூடாது“ என்றார். அவருடைய பேச்சுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது.

விவசாயிகள், “சிவகிரி முதல் களக்காடு வரையுள்ள மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. யானைகள் உள்ளிட்ட விலங்குகள் விளை நிலங்களுக்கு புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது. எனவே வனத்துறையினர் மலையடிவார பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். கூடுதலாக பணியாளர்களை நியமிக்க வேண்டும்“ என்றனர்.

வனத்துறை அதிகாரி, “சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வறட்சி ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் இல்லாமல் வனவிலங்குகள் கீழே வருகின்றன. தற்போது மலைப்பகுதியில் குட்டை அமைத்து தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இனி வனவிலங்குகள் பயிர்களை சேதப்படுத்தாமல் பார்த்து கொள்ளலாம்“ என்றார். இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடந்தது.

குறை தீர்க்கும் கூட்டம் நடந்த அரங்கம் முன்பு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில் கண்காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தன. அதை விவசாயிகள் ஆர்வமாக பார்த்தனர்.

Next Story